நோயாளர்களை பார்க்க மருத்துவமனை செல்வோருக்கு விசேட அறிவித்தல்!
வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிதல். சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகளுக்கான பொருட்களை நேரில் சென்று வழங்காமல் உரிய பணியாளர்களின் ஊடாக வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு வதிவிடங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றுகின்றதா என்பது தொடர்பில் காவற்துறையினர் சோதனை நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது பல வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் முகக்கவசம் அணியாது இருப்பதை அவதானித்துள்ள நிலையில், அவர்களுக்கு காவற்துறையினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.