Breaking News

90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை தொற்றில் இருந்து தடுக்கக்கூடிய கொரோனாவிற்கான தடுப்பூசி அறிமுகம்!

தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை தொற்றில் இருந்து தடுக்கக்கூடியது என ஆரம்ப பரசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த கண்டுபிடிப்பு மருத்துவ விஞ்ஞானத்திற்கு மனித நேயத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி என இதனை உற்பத்தி செய்த பைசர் (Pfizer மற்றும் பயோடெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  

இந்த தடுப்பூசி ஆறு நாடுகளை சேர்ந்த 43 ஆயிரத்து 500 பேருக்கு பிரயோகிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை.  

அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜெண்டீனா, தென் ஆபிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலேயே பரிசோதிக்கப்பட்டு சிறந்த பலனை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தடுப்பூசிக்கான அனுமதியினை அவசரமாக பெற்று இந்த மாத இறுதியில் பாவனைக்கு விட முடியும் என உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.  

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி 3 வார காலப்பகுதியினுள் இரு முறை தொற்று நோயாளிக்கு பிரயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளும் சக்தி நோயாளருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி மருந்துகளை தம்மால் தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

அதற்கமைய 2021 ஆம் ஆண்டு இறுதியில் 130 கோடி தடுப்பூசியினை தயாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிருத்தானியா ஏற்கனவே 3 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.