நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விஷேட உரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இன்றிரவு 8.30 மணியளவில் இந்த உரை இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்காக விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்று, இன்று ஒருவருடம் பூர்த்தியாகிறது.
கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட அவருக்கு 52.25 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
நாட்டின் ஜனாதிபதியாக முதன்முறையாக தெரிவான அரசியல் செயற்பாட்டுடன் நேரடியாக தொடர்பு படாதவரும், முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.
அத்துடன், அவர் தனது ஓராண்டு பூர்த்தி நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்த தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளும் இன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.








