சித்ராவின் அம்மா அளித்த தகவலால் ஹேமந்த்துக்குச் சிக்கல்? ஆர்டிஓ-விடம் கதறி அழுத குடும்பத்தினர்!
நடிகை சித்ராவின் அம்மா விஜயா, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீயிடம் அளித்த தகவலால் ஹேமந்த்துக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடந்திருப்பதால், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார். சித்ரா இறப்பதற்கு முன்புவரை விடுதி அறையில் தங்கியிருந்தவர் ஹேமந்த். அதனால் நசரத்பேட்டை போலீஸார் அவரிடம் டிசம்பர் 9-ம் தேதி முதல் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் ஹேமந்த் என்ன சொன்னார் என்ற தகவல் ரகசியமாக இருக்கிறது.
சித்ராவை ஹேமந்த்தான் கொலை செய்துவிட்டதாக சித்ராவின் அம்மா விஜயா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில், ஆர்டிஓ விசாரணைக்காக வந்திருந்த விஜயா, அவரின் கணவர் காமராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் சித்ரா மரணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. சித்ரா இறப்பதற்கு முன்பு அவரின் அம்மா விஜயாவிடம் நீண்டநேரம் போனில் பேசியதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். அதனால் சித்ரா என்ன பேசினார் என்ற கேள்வி விஜயாவிடம் ஆர்டிஓ விசாரணையின்போது கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு விஜயா அளித்த பதில்களைப் பதிவு செய்த ஆர்டிஓ., இன்னும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அதற்கும் விஜயா கண்ணீர்மல்க பதிலளித்திருக்கிறார்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த விஜயா, ``என் மகள் சித்ராவின் மரணத்துக்கு ஹேமந்த்தான் காரணம். நடந்தது கொலை. மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். என்னால் என் மகளுக்கு நிச்சயம் மன அழுத்தம் ஏற்படவில்லை. இறப்பதற்கு முன் என்னுடன்தான் சித்ரா போனில் பேசினாள். அப்போதுகூட அவள் எதுவும் சொல்லவில்லை. நானும் அவளும் சண்டைபோடவில்லை’’ என்று கண்ணீர்மல்கக் கூறினார்.
சித்ராவின் சகோதரர் சரவணன், ``ஆர்டிஓ விசாரணைக்கு ஆஜராகி, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறோம். வரதட்சணைக் கொடுமை குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்குப் பிறகு அது குறித்து தகவல் சொல்கிறோம். தங்கை இறந்த துக்கத்தால் குடும்பத்திலுள்ள அனைவரும் கடுமையான மன உளைச்சலிருக்கிறோம். அதனால் எங்களால் இப்போதைக்கு எதுவும் பேச முடியவில்லை" என்று கூறினார்.
நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம், ரசிகர்கள்!
விஜயாவின் தகவலின்படி பார்த்தால் சித்ராவின் மரணத்துக்கு வேறு காரணம் இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் சித்ராவின் கணவர் ஹேமந்த் மற்றும் அவரின் பெற்றோரிடம் ஆர்டிஓ அடுத்தகட்டமாக விசாரணை நடத்தவிருக்கிறார். அவர்கள் அளிக்கும் தகவலின்படி, ஆர்டிஓ போலீஸாரிடம் அறிக்கை சமர்பிக்கவிருக்கின்றனர். அதன் பிறகுதான் சித்ராவின் வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ராவின் மரணத்தில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்கள் இருப்பதாக அவரின் நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர்கள் சொல்லிவருகின்றனர். ஆனால், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் சித்ரா தற்கொலை செய்திருப்பதாக டாக்டர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதுதான் இதுவரை தெரியவில்லை.
மன அழுத்தம் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சித்ராவுக்கு மன அழுத்தத்தை யார் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு போலீஸாரிடம் பதில் இல்லை. ஆர்டிஓ விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என நசரத்பேட்டை போலீஸார் சொல்லிவருகின்றனர். ஆனால் ஆர்டிஓ விசாரணையில் சித்ராவின் அம்மா மற்றும் குடும்பத்தினர் அளித்த தகவல்கள் ஹேமந்த்துக்கு எதிராகவே இருக்கின்றன. அதனால் ஆர்டிஓ விசாரணையின் அறிக்கை, சித்ராவின் மரண மர்மத்தை விலகவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ராவின் குடும்பத்தினர் ஹேமந்த் மீது குற்றம் சுமத்தினாலும் ஹேமந்த், `சித்ரா என் உயிர், அவளை இழந்து தவிக்கிறேன்’ என போலீஸாரிடம் தொடர்ந்து கூறிவருகிறார். அதனால் சித்ராவின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பதை போலீஸார்தான் கண்டறிய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.








