Breaking News

தலிபான்களின் ஆட்சி பாகிஸ்தானில் அதிகரிக்கும் பயங்க்கரவாத தாக்குதல்!

 


ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் நிரந்தரமான பகை நாடுகளாகவே இருந்து வந்தன. கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்த போது அந்த அரசு பாகிஸ்தானுக்கு எதிராகவே நடந்து கொண்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினார்கள். தலிபான்களில் ஒரு பிரிவினருக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வந்தது.

குறிப்பாக தலிபான் இயக்கத்தில் உள்ள ஹக்கானி நெட்வொர்க் பிரிவினர் பாகிஸ்தானின் உளவுப்படை கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்தது.

இந்தநிலையில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் அது பாகிஸ்தானுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது. பாகிஸ்தான் உளவுப்படை தலைவர் நேரடியாகவே ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட்டார்.

இதனால் இன்று வரை தலிபான்கள் ஆட்சி அமைக்கவில்லை. தலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் முழுமையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

ஆனால் பாகிஸ்தானில் கடந்த காலத்தை விட தற்போது பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 35 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 52 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 20 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள்.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் இத்தனை தாக்குதல்கள் இப்போதுதான் நடந்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை 187 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 317 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களும் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருந்தவரை பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது முடங்கிக் கிடந்தது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்து விட்டதால் அவர்கள் மீண்டும் தலை தூக்கிவிட்டனர்.

இது பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் திணறி வருகின்றன.