Breaking News

வெகு விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் – வே.இராதாகிருஷ்ணன்!

 


அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த அரசாங்கமே. இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.

இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம்,வேலைக்கான உரிய சம்பளமின்மை, தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு, எந்த காரணத்திற்காகவும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.

எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்தார்.