Breaking News

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியசாலையை நாடுங்கள் - மக்களுக்கு வேண்டுகோள்!

 


காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால், சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டமையால், அதிகளவான வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுகின்றமையினால், நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை மக்கள் அடையாளம் கண்டு துப்பரவுசெய்ய வேண்டும். நுளம்பு கடிக்கும் நேரங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 22 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். மாவட்டத்தில் புதிதாக 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 13 தொற்றாளர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 6 தொற்றாளர்கள் மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 4 தொற்றாளர்கள் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான மற்றும் முதல் தொடர்பாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 17 ஆம் திகதி அன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும் 3 தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் முருங்கன், பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் நானாட்டான் ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒரு தொற்றாளர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலப்பகுதியில் தொற்று அதிகரிக்க காரணமாக காலநிலை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் கடை பிடிப்பதில் ஏற்பட்டுள்ள தளர்வு நிலை ஆகிய காரணங்களால் தற்போது தொற்று அதிகரித்துள்ளது.

பாடசாலைக்கு செல்லாத, ஆனால் பாடசாலை செல்லும் வயதுடையவர்களுக்கான தடுப்பூசி 1,144 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 3 ஆவது தடுப்பூசியை முன் கள பணியாளர்கள் 595 நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. இந்த வருடம் மொத்தமாக 33 டெங்கு நோயளர்களும்இ நவம்பர் மாதத்தில் 6 டெங்கு நோயளர்களும் மன்னார் நகர பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.