இலங்கை அணிக்கு மற்றுமொரு வெற்றி!
"வீதி பாதுகாப்பு உலக சம்பியன்ஷிப்" கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியிருந்தார்.
அதன்படி களம் இறங்கிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.
இதில் இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 36 ஓட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், கார்னெட் குரூகர் 2 விக்கெட்டுக்களையும், வர்னன் பிலெண்டர் மற்றும் ஜொஹான் போத்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை துரத்த களம் இறங்கிய தென்னாப்பிரிக்க லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக மோர்ன் வேன் வைக் 76 ஓட்டங்களையும் அல்விரோ பீட்டர்சன் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நுவான் குலசேகர 2 விக்கெட்டுக்களையும், திலகரத்ன டில்ஷான், இசுரு உதான மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.