Breaking News

சஜித் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள்!

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(20) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்வி எழுப்பியுள்ளளார்.

ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் போதைப்பொருள் பயன்பாட்டை விட்டும் தவிர்ப்பதற்கு ஊக்கப்படுத்துவது ஏனெனில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி செயல்முறையின் ஒரு அங்கமாக கருதுவதாலாகும்.

இந்நாட்டில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் போதைப்பொருள்,சிகரெட் மற்றும் மதுபானங்களின் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் காரணமாக மது மற்றும் சிகரெட்டின் சட்டப்பூர்வ பயன்பாட்டைக் குறைத்தாலும் சட்டவிரோத போதைப்பொருள், சிகரெட் மற்றும் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சிகரெட் மற்றும் மது வரி விதிப்பதன் மூலம் பொது வருவாயை மேம்படுத்துவது ஒவ்வொரு அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்தாலும், இந்நாட்டில் மதுபானம் மற்றும் புகையிலை வரிவிதிப்பு தொடர்பான நிரந்தர கொள்கை இல்லாதது, வரி கணக்கீடுகளில் ஊழல் மற்றும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டும் முறைகேடுகளால், அரசுக்கு ஏராளமான வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

எனவே,மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் வகையில்,போதைப்பொருள் தடுப்பு, சுகாதார செலவுகளை குறைத்தல், வருமான ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்ட போதைப்பொருள்,புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய கொள்கைக்குச் செல்வது காலப் பொருத்தமாகும்.

அதற்கு இலங்கையில் மதுபான பாவனையை சகல வழிகளிலும் குறைப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதேபோல், கொள்கைகளை வகுப்பின் போது மக்களால் நுகரப்படும் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கு முறையான தரத்தைப் பேணுவதும் அவசியமாகும். மேலும், அனைத்து மதுபானங்கள் மீதான வரிகளும் முறையான ஒழுங்குமுறையுடன் அதிகரிக்கப்பட வேண்டும். சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரிகளை கணக்கிடுவது ஒரு முறையான பொறிமுறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

1. புகையிலை மற்றும் மதுப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கை என்ன?

2. சிகரெட் மற்றும் மதுவின் கடந்த ஆண்டுக்கான தனித்தனியான வரி வருவாய் யாது? அரசின் மொத்த வருவாயில் அது எவ்வளவு சதவீதம்? புகையிலை மற்றும் மது வரி விதிப்பால் போதுமான வரி வசூலிப்பதாக அரசு நினைக்கிறதா? அவ்வாறு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் விதிக்கப்படும் வரியின் அளவை அதிகரிக்க அரசு செயல்படுமா?

3. சிகரெட் மற்றும் மதுவிற்காக விதிக்கப்படும் வரி முறைமை யாது? செலுத்த வேண்டிய வரியை நிர்ணயிப்பதில் உற்பத்தி செய்யப்படும் சிகரெட் மற்றும் மதுவின் அளவு கணக்கிடப்படும் வழிமுறை என்ன? அதன் வெளிப்படைத்தன்மை குறித்து நம்பிக்கை கொள்ள முடியுமா?

4. புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையால் (NATA), புகையிலை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு வரி விதிப்பதற்கு புதிய வரிச்சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசாங்க வருவாயை அதிகரிக்கும் வகையிலும் புகையிலை, போதைப்பொருள், மது பாவனையை குறைக்கும் முகமாகவும் வரி சூத்திரத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துமா? இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

5. கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மதுபானம் பயன்படுத்தியதால் சுகாதாரத் துறைக்கு அரசு செலவழிக்க நேரிட்ட தொகை எவ்வளவு? கடந்த ஆண்டை விட ஒப்பிடும் இது அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

6. புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பாக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டாலும், மறைமுகமாக பல்வேறு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற மறைமுக விளம்பரங்களை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? அது என்ன?

7. பிள்ளைகளுக்கு புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தடைசெய்யும் கல்வியை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு செயல்படுத்துகிறதா? அந்த வேலைத்திட்டத்திட்டம் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறெனில்,அதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?