Breaking News

சிவ. ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார்.
 

கொலைக்கு சதி செய்ததாக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், பிரதிவாதிக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 43 வயதான ஆரூரன், 2004 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கற்கும் போது கைது செய்யப்பட்டார்.

   

அரசியல் கைதியான சிவ ஆரூரனின் ஆளுமை- பி.மாணிக்கவாசகம் 

சிவ ஆருரன் - தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு உணர்வுகளுடன் பேசப்படுகின்ற ஓர் ஆளுமையாகத் திகழ்கின்றார். சிவ லிங்கம் ஆருரன் என்பது அவரது முழுப்பெயர். யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு நிலாவில் என்ற இடத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். 

ஆனால் இப்போது 14 வருடங்களாக கொழும்பு புதிய மகசின் கொடுஞ் சிறையில் அடை பட்டுக்கிடக்கின்றார். ஆம். அவர் ஓர் அரசியல் கைதி. மொரட்டுவ பொறியியல் பீடத்தின் பொறியியல் இளமாணிப் பட்டதாரி. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முதுமாணிப் பட்டப்படிப்பில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இன்னும் இழுபறி நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 

இந்த வழக்கு நவம்பர் மாதம் முதலாம் திகதி அழைக்கப்பட்ட போது சித்திரவதையின் மூலமே தன்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சிவ ஆரூரன் விசாரணையில் கூறினார். வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் தமது சமர்ப்பணங்களைச் செய்வதற்குக் கால அவகாசம் வழங்கி வழக்கு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த வழக்குத் தவணையின் போது சிவ ஆரூரன் சாதாரண அரசியல் கைதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அவருக்கு விருது வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நிலையில் ஆதுரசாலை என்ற நாவலுக்கு அரச சாகித்திய விருது பெற்ற இலக்கியப் படைப்பாளியாகவே அவர் நீதிமன்றத்தில் தோன்றியிருந்தார். 

அரசியல் கைதியாக சிறைவாசம் செய்யும் ஆரூரன் சிறந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாழ்க்கை என்பது கொடுமையானது. சித்திரவதைகளும் கொடுமைகளும் மாறாத துன்பதுய ரங்களையும் கொண்டது. இருப்பினும் சிறைவாசத்தின்போதே பலர் தமது அறிவுத் திறனை எழுத்துகளின் மூலமாக - படைப்பிலக்கியத்தின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

உலக ஆளுமைகளில் பலர் சிறைவாசத்தின்போதே சிறந்த படைப்பாளிகளாகவும் அறிஞர்களாகவும் வெளிப்பட்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் சிறைவாழ்க்கை அனுபவங்களும் அங்கு கிடைக்கின்ற வாசிப்புக்கான வாய்ப்பும் அதனையொட்டிய சுயசிந்தனைப் போக்கும் விரிந்த சிந்தனையுமே முக்கிய காரணங்களாகும். 

இத்தகைய சிறை அனுபவமே சிவ ஆரூரனை சிறந்த சிறுகதை எழுத்தாளரா கவும் நாவலாசிரியராகவும் புடம் போட்டிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

அப்போது சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்து கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது நலன்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கைதிகளுக்குப் புத்தகங்களைக் கொண்டு சென்று வழங்குவது வழக்கம். அவ்வாறு தனக்குக் கிடைத்த புத்தகங்களை ஆரூரன் வாசிக்கத் தொடங்கினார். பாடசாலை நூலகத்தில் புத்தகங்களைப் பெற்று மாணவப் பருவத்தில் வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆரூரனுக்கு தடுப்புக் காவலின் போது கிடைத்த புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரப்படுத்துவதற்குப் பேருதவியாக அமைந்தன. 

ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட துறைமுகப் பொலிஸ் நிலையத் தடுப்பு வாழ்க்கையைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு விளக்கமறியற்சாலைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கேயும் தொடர்ந்த வாசிப்புப் பழக்கம் அவரை சிறுகதை எழுதத் தூண்டியது. சிறுகதைகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவரது சிறுகதையொன்றை தாயகம் இதழ் பிரசுரம் செய்தது. அது அவரை ஊக்கப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் தீவிரமாக சிறுகதைகளை எழுதினார். 

இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த விளக்க மறியற்சாலையையடுத்து 2011 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி புதிய மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போது அவர் நாவல் எழுதுவதில் ஆர்வம் கொண்டார். இவருடன் சிறைவாசம் செய்த தேவதாசன் என்ற அரசியல் கைதியே இவரது இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்தவராவார்.

 

ஆரூரன் எழுதுகின்ற படைப்புகளின் முதல் எழுத்துப் பிரதியை வாசித்து கருத்துக் கூறிய பின்னரே அவற்றை இறுதி செய்து வெளியீடுகளுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சிறுகதைத் தொகுப்பு நாவல்கள் என்பவற்றின் பிரதிகளை தந்தையார் சிவலிங்கமே செவ்வைப் பார்த்தல் வெளியீடு செய்தல் என்பவற்றைச் செய்து வருகின்றார். 

சிறைச்சாலையில் மகனைப் பார்வையிடச் செல்கின்ற தந்தையார் முக்கியமாகப் புத்தகங்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று ஆரூரனின் இலக்கிய முயற்சிகளுக்கு ஊன்று கோலாகத் திகழ்கின்றார். தந்தையாரின் பங்களிப்பு இல்லையேல் தனது நூல்கள் வெளிவருவது சாத்தியமாகியிருக்காது என்பது ஆரூரனின் கூற்று. 

கொழும்பில் ஒக்ரோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற தேசிய இலக்கிய விழாவில் ஆதுரசாலை என்ற அவர் எழுதிய நாவலுக்கு அரசு சாகித்திய விருது வழங்கி கௌரவித்தது.  சிவ ஆரூரன் அரசவிருது பெற்ற படைப்பிலக்கிய ஆளுமை .

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரச படையினரால் பயங்கரவாதியாக சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள முரணான ஒரு நிலையிலேயே அவரது இலக்கியப் படைப்பாற்றலுக்கான விருது வழங்கப்பட்டது. அரச இலக்கிய விழாவில் விருது பெறுவது என்பது இலக்கியப் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் கிடைக்கின்ற அதிஉயர் கௌரவமாகக் கருதப்படுகின்றது. 

அத்தகைய கௌரவத்துக்கு உரியவராகிய சிவ ஆரூரனை அரச விழா நிகழ்வின் அறிவிப்பாளர்கள் மேடைக்கு அழைத்தபோது காவல்துறையினரின் சீருடையில் இருந்த அதிகாரி ஒருவர் அவரை நிழலாகப் பின்தொடர்ந்து ஒட்டிக்
கொண்டிருந்தார். மேடையில் விருது பெற்றபோதும் அந்த அதிகாரி ஆரூரனைத் தனது கைப்பிடியில் வைத்திருப்பதைப் போலவே நடந்து கொண்
டிருந்தார்.

பொலிஸாரின் இந்த காவல் கடமைச் செயற்பாட்டு விழாவில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தவர்களை மட்டுமல்லாது தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த காட்சிகளிலும் கண்ணுற்றவர்களையும் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகச் செய்தது. அரசியல் கைதிகளை அரசு பயங்கரவாதிகளாகவே நோக்குகின்ற நோக்கில் இருந்து அரசு இன்னும் மாறவே இல்லை.

அவர்கள் சந்தேக நபர்களாகவே சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.  தண்டனைக் கைதிகளைவிட இத்தகைய ஏனையோர் பயங்கரவாதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னதாகவே அவர்களை அரச தரப்பினர் பயங்கரவாதிகளாகவே நடத்துகின்றனர். இத்தகைய ஒரு காவல் கட்டுப்பாட்டு நடத்தை நிலைமையே சிவ ஆரூரன் அரச இலக்கிய விழாவில் சிறந்த நாவலை எழுதியமைக்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டபோது நிலவியது.

சிவ ஆரூரன் மட்டுமன்றி விவேகானந்தனூர் சதீஸ் போன்ற இலக்கியப் படைப்பாளிகள் சிலரும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் விடுதலை தேடும் சிறைப்பறவைகளாக இருக்கின்றனர். கணேசசுந்தரம் கண்ணதாஸ் என்றொரு மிருதங்கக் கலைஞர் இலக்கியப் படைப்பாளி நுண்கலை அறிஞரும்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் மற்றும் சிறைத்தண்டனை என்பவற்றுக்கு உள்ளாகி பின்னர் விடுதலையாகி உள்ளார். 

அவரும் ஒரு சிறந்த கலைஞர் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனைக் கைதியாக உள்ள விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய வேப்ப மரமும் பவளம் ஆச்சியும் என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. கவிதைகள் எழுதுவதிலும் ஆற்றல் மிக்க இவரது கவிதைகள் பலவும் நூலுரு பெற்றிருக்கின்றன.

படைப்பிலக்கியத்தில் வல்லமையுள்ள இவரும் சிறைக்கொடுமையில் இருந்து விடுதலையாகிய குடும்பத்துடன் இணையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். சிவ ஆரூரன் ஏழு நூல்களை இதுவரையில் வெளியிட்டிருக்கின்றார். அவற்றில் ஒன்று ஆங்கில நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Innocent Victims என்று தலைப்பிலான அந்த நாவல் ஆற்றொழுக்கு போன்ற எளிமையான அழகிய ஆங்கில மொழி நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. இது அவரது முதலாவது ஆங்கிலமொழி நூல் என்பதை நம்ப முடியாத வகையில் அவர் அதனை எழுத்தாளுமையுடன் எழுதியிருக்கின்றார். யாழிசை அவரது முதலாவது நாவல். சாகித்திய விருது பெற்ற நூலில் முதன்மையானது. 

அவரது ஏழு நூல்களில் நான்கு நூல்கள் சாகித்திய விருது பெற்றிருக்கின்றமை அவரது படைப்பிலக்கிய ஆற்றலுக்கு சான்று பகர்வதாக அமைந்திருக்கின்றன. இந்த வருட அரச இலக்கிய விழாவில் சாகித்திய விருது பெற்ற அவரது ஆதுரசாலை என்ற நாவல் வடமாகாணத்தின் சிறந்த நாவலாக ஏற்கெனவே மாகாண மட்டத்தில் தெரிவாகியிருந்தது.

சிறந்த இலக்கியப் படைப்பாளி என்ற ரீதியில் இரு தடவைகள் உதயணன் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. படைப்பாற்றலும் பொறியியல் கல்விச் செல்வமும் வாய்க்கப்பெற்றுள்ள சிவ ஆரூரனைப் போன்ற பல அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அவர்களது மனித வலுவும் செயற்திறனும் ஆற்றல்களும் பயனற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. துறை சார்ந்தவர்களைத் தேடிப்பிடித்து முதன்மைப்படுத்துவதுடன் அவர்களோடு அனைத்து அரசியல் கைதிகளையும் அரசு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முன்வர வேண்டும். அதுவே சிவ ஆரூரன், விவேகானந்தனூர் சதீஸ், கண்ணதாஸ் போன்ற சிறந்த படைப்பாளிகளுக்கு அரசு அளிக்கின்ற சிறந்த அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் அமையும்.