Breaking News

நெடுந்தீவில் 5 பேர் வெட்டிக்கொலை ஒருவர் படுகாயம்


யாழ் நெடுந்தீவில் ஐந்து பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு 3 பெண்களும் 2 ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

   

நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்தே வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன. 

மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவரும் புலம்பெயர் தேசத்திலிருந்து வருகை தந்தவரென சொல்லப்படுகிறது.

இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர். ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டார். மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.




நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையைத் தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.