இந்தியில் பேசாதீங்க; தமிழில் பேசுங்க ப்ளீஸ்.. மனைவிக்கு அன்பு கட்டளையிட்ட ஏ.ஆர்.ரகுமான்!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.
இதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏ.ஆர். ரகுமான் பேசி கொண்டிருந்தபோது, தனது மனைவியையும் மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அப்போது ஏ.ஆர். ரகுமான் என் பேட்டிகளை நான் திரும்பி பார்க்க விரும்ப மாட்டேன்.
ஆனால் என் மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரானார். அப்போது மனைவியிடம், இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார்.
இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது குரலில் சொக்கி போய் விடுவேன் என்று கூறினார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.