நான் சிரியஸான படம் எடுத்தால் ஓடமாட்டேங்குது -வெங்கட் பிரபு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நீங்கள் சீரியஸான படம் எடுத்தீர்கள் என்றால் அதை எப்படி தயார்படுத்துவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு வெங்கட் பிரபு, 'நான் சீரியஸாக படம் எடுத்தால் அது ஓடமாட்டேங்குது. நானும் வெற்றிமாறன் போன்று படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை. மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தான் ரசிகர்கள் என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
எண்டர்டெயின்மென்ட் படம் தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும். என்னிடம் இருந்து மக்கள் சீரியஸான படங்களை ஏற்றுக்கொள்ள மட்டார்கள்" என்று பேசினார்.