மூன்று நாட்களில் கடவுச்சீட்டு வீட்டுக்கு!
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், ஒன்லைன் முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாகவும், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய கூரியர் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய,
கடவுச்சீட்டு வழங்குவதில் தரகர்கள் ஏதோ ஒரு வகையில் தலையிடுவதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகின. அதன் பிரகாரம், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பணிப்புரை வழங்கப்பட்டது. அதன்படி, நாங்கள் உருவாக்கிய புதிய திட்டத்தை ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வரலாற்றில் இந்த வேலைத்திட்டம் ஒரு திருப்புமுனையாகும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அடுத்த வருடம் 75 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. அந்த நேரத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அது திணைக்களம் அடைந்த பெரும் சாதனை என்றே கூற வேண்டும்.
இந்த புதிய முறையின்படி ஒருவர் வீட்டில் இருந்தபடியே இந்த சேவையைப் பெற முடியும். www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் (ஓன்லைன் முறை) என்ற இடத்தில் , உரிய தரவை உள்ளிட்ட பின்னர், தகவலை சரிபார்த்த பிறகு பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உரிய விண்ணப்பம் விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து மென் பிரதியை பதிவேற்றம் செய்த பின்னர் தான் கடவுச்சீட்டை 03 நாட்களிலா அல்லது சாதாரண முறைப்படி 02 வாரங்களுக்குள்ளேயா பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும்.
இந்த செயல்முறைக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் கைவிரல் அடையாளத்தை வழங்கி ஒன்லைன் முறையின் மூலம் இலங்கை வங்கிக் கணக்கில் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
எவருக்கேனும் வீட்டில் இது தொடர்பான செயல்முறையை செய்ய முடியாதபட்சத்தில், அவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையத்திற்குச் சென்று இச்செயல்முறைகளை செய்து கொள்ளலாம்.
பிரதேச செயலகத்திற்குச் சென்று கைவிரல் அடையாளத்தை வழங்கிய பின்னர், எவருக்கேனும் உரிய கொடுப்பனவுகளை இணையத்தில் செலுத்த முடியாவிட்டால் அதற்கான மாற்று வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கைவிரல் அடையாளத்தை வழங்கிய பின்னர் பிரதேச செயலகத்தினால் ஒரு இலக்கம் வழங்கப்படும். அந்த இலக்கத்தை இலங்கை வங்கியில் சமர்ப்பித்தால், அதற்கான தொகையை இலங்கை வங்கி எமது திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கும்.
ஏற்கனவே 50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை பதியும் இயந்திரங்கள் மற்றும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய கூரியர் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. கூரியர் முறையில் கடவுச்சீட்டை வீட்டிற்கு அனுப்பிவைத்தல் தொடர்பாக தபால் திணைக்களத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த முறையின் படி 03 நாட்களில் கடவுச்சீட்டை உங்கள் வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
கொழும்பு நகருக்குள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 02 நாட்களுக்குள் கடவுச்சீட்டை வீடுகளுக்கு கையளிக்க முடியும் என தபால் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது. ஏனைய பிரதேச விண்ணப்பதாரர்கள் 03 நாட்களில் கடவுச்சீட்டை அவர்களது வீட்டிற்கே பெற்றுக் கொள்வார்கள்.
இதன்போது நிகழும் முறைகேடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை இச்செயல்முறைக்கு அதிகபட்சமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.