4 ஆயிரத்திற்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்திற்கு விற்ற டிக்டாக் பிரபலம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் மில்லர். டிக்டாக் பிரபலமான இவர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த இவருக்கு பழம்பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்தது.
இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த அவர் அதனை 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) வாங்கி உள்ளார்.
பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். அதன்பிறகு பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார்.
பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) ஏலம் போனது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.