Breaking News

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை அரசாங்கம் ஒடுக்குகின்றது : சஜித் பிரேமதாச!

 


நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரலகங்வில, தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர ஊடக நிறுவனங்களைக் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும்,அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன், புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும்,இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.