Breaking News

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கு வௌிநாடு செல்ல தடை!

 


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி, அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கும் வரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

(செய்திப் பின்னணி)

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதங்கேணி கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையத்திற்கு அருகில் கடந்த 2 ஆம் திகதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நேற்று (05) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சந்தேகநபரான ஆண் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையின் போது இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் அடையாள அட்டையை காண்பிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.