Breaking News

பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்!

 


இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன் போது அவர் ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாங்கள் கட்டை விரலில் இருந்த காயத்துக்கு மருந்து கேட்டோம். ஆனால் அவர்கள் சின்ன விரலுக்கு மருந்தைத் தந்துவிட்டு, எல்லா விரல்களுக்கும் இதுதான் மருந்து, எல்லா வியாதிகளுக்கும் இதுதான் மருந்து என்று கூறப் பார்க்கிறார்கள்….” என்று.

அவர் கட்டைவிரல் என்று சொன்னது இனப்பிரச்சினையை. இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் ஒரு தீர்வைக் கேட்டுப் போராட,அப்போராட்த்தின் விளைவாக இலங்கை -இந்திய அரசுகள் ஓர் உடன்படிக்கையை செய்துவிட்டு, தாங்கள் விரும்பிய ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு தந்தன. அதுதான் 13 ஆவது திருத்தம். ஆனால் அத்தீர்வை அவர்கள் தமிழ் மக்களுக்கு மட்டும் தரவில்லை. 

முழு இலங்கைக்கு உரியதாகத் தந்தார்கள். அதாவது தங்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுப் போராடாத சிங்கள மக்களுக்கும் அவர்கள் அதைக் கொடுத்தார்கள். அதன் மூலம் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை முழு இலங்கையர்க்கும் பொதுவான அதிகார பரவலாக்கல் என்ற ஒரு பிரச்சினை தான் உண்டு என்று காட்டப் பார்த்தார்கள். அதாவது மைய முரண்பாட்டை ஒரு பொது முரண்பாடாக சமச்சீராக்க பார்க்கிறார்கள்.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் அதைத்தான் செய்கிறார்.அவர் மட்டுமல்ல அவருக்கு முன்னுக்கு இருந்த சிங்கள தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு சர்வ கட்சி மாநாடு என்று கூட்டும்போதெல்லாம் அவர்கள் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை என்றுதான் பொருள்.இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் சிங்கள முஸ்லிம் பிரதிநிதிகள் அமர்ந்து பேச வேண்டிய ஒன்று. அது முதலாவதாக இரு தரப்பு பேச்சு வார்த்தை. முஸ்லிம் தலைப்பை இணைக்கும் போது முத்தரப்பு பேச்சுவார்த்தை.அதில் அரசாங்கம் சிங்கள மக்களை பிரதிபலிக்கும். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் தமிழ் தரப்பை பிரதிபலிக்கும். அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் தமிழ் கட்சிகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். ஆனால் ஆளுங்கட்சியல்லாத ஏனைய சிங்களக் கட்சிகள் அதில் வர வேண்டிய தேவை என்ன? அரசாங்கம் எனப்படுவது சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. எனவே சிங்கள மக்களை அரசாங்கம்தான் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க சர்வ கட்சி மாநாடு என்று கூட்டுகிறார். கடந்த கிழமை நடந்த சந்திப்பில் அவரும் சுமந்திரனும் மோதிக் கொண்டார்கள். அது ஒரு சுவாரசியமான மோதல். அதை ரசிக்கலாம். அதுபோலவே அதற்கு முன் நிகழ்ந்த மற்றொரு சந்திப்பில் ரணில் தொல்லியல் திணக்கணத்தின் பனிப்பாளரோடு கடுமையாக நடந்து கொண்டார்.

அதுவும் ஒரு சுவாரசியமான உரையாடல்.அதையும் ரசிக்கலாம். இவ்வாறு சுமந்திரன் ரணிலோடு வெளிப்படையாக மோதுவதன்மூலம் அவர் அரசாங்கத்தை அம்பலப்படுத்தலாம்.அந்தளவில் அந்த மோதலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மேலும் அன்றைய மோதலின்போது சுமந்திரன் முன்னாள் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பேசினார். பங்காளி கட்சிகளும் தமிழரசு கட்சியும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் இருப்பது போன்ற ஒரு தொனி அவரிடம் காணப்பட்டது. 

அதாவது கூட்டமைப்பு. ஆனால் ரணில் அந்தக் கூட்டை பொருட்படுத்தவில்லை. எப்படி விக்னேஸ்வரனை தனியே கையாளலாம் என்றுதான் முயற்சித்தார். விக்னேஸ்வரனும் அதற்கான வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார்.

தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலுக்கு காரணங்கள் நான்கு. முதலாவது காரணம், கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் பெற்ற தோல்வி. கடந்த பொதுத் தேர்தலின் போது கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்கு உள்ளாக்கியது. தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி உடைந்தது. 

ஆறு ஆசனங்களை கூட்டமைப்பு இழந்தது. இந்த தோல்வியிலிருந்து தமிழரசுக் கட்சி பாடம் கற்றிருப்பதாகத் தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்கவோடு தேனிலவு கொண்டாடியதன் விளைவுதான் அந்தத் தோல்வி என்று அவர்களுக்கு தெரிகிறது. எனவே மோதலுக்கு போவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.

பாரம்பரியமாக தமிழரசு கட்சி யு.என்.பியின் கூட்டாளி. ஆனால் இம்முறை ராணி யு.என்.பியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் மஹிந்த அணியைத்தான் பிரதிபலிக்கின்றார். மேலும்,சுமந்திரன் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஆதரித்தவர்.

 அதற்கு ஆதரவாக வடக்கில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.எனவே தன்னெழுச்சிப் போராட்டங்களை நசுக்கிய ரணிலோடு அவர் உடனடியாக கூட்டுச்சேர்வது கடினம். இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிரமான எதிர்ப்பு அரசியல். அதை எதிர்கொள்வதற்கு தமிழரசுக் கட்சியும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறது.

மூன்றாவது காரணம், கூட்டமைப்பு இப்பொழுது இல்லை. பங்காளிக் கட்சிகள் உடைந்து விட்டன. பங்காளிக் கட்சிகளுக்கு எதிராக தன்னை நிலை நிறுத்துவதற்கு தமிழரசு கட்சிக்கு தீவிர எதிர்ப்பு அரசியல் தேவை. ஏனென்றால் பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியை விடவும் தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தால் மீண்டும் வாக்கு வங்கி சேதமாகலாம்.

நாலாவது காரணம்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டி. கட்சியின் தலைவர் யார் என்ற போட்டியில் தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர்;இந்தியாவுக்கு நெருக்கமானவர் போன்ற தகமைகள் தேவை என்று அவர்கள் கருதக்கூடும்.

எனவே மேற்கண்ட காரணங்களின் விளைவாகத் தமிழரசுக் கட்சி இப்பொழுது எதிர்ப்பு அரசியல் தடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. அல்லது எதிர்ப்பது போல ஒரு தோற்றத்தைக் காட்டுகின்றது.அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை பாதுகாக்கலாம் என்று அக்கட்சி நம்புகின்றது. 

இதனால் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்கு அழைத்ததில் இருந்து தமிழரசுக் கட்சி முரண்படும் ஒரு போக்கைத் துலக்கமாக வெளிப்படுத்தியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தை மேசையிலும் அது வெளிப்பட்டது.

அது மட்டுமல்ல, அண்மையில் குருந்தூர் மலையில் போலீசாரோடு ஏற்பட்ட தள்ளுமுள்ளின் போது தமிழரசு கட்சியை செய்தவர்களும் காணப்பட்டார்கள். மேலும் புளட் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தார்கள். வழமையாக இதுபோன்ற மோதல்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் முன்னணியில் நிற்கும். 

ஆனால் கடைசியாக குருந்தூர் மலையில் பொலிசோடு ஏற்பட்ட முரண்பாட்டின்போது புளட் இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழரசுக் கட்சியைச் சென்றவர்கள் காணப்பட்டார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள். இவ்வாறாக நில ஆக்கிரமிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல் போன்றவற்றுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதே பாணியில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் மூலம் வாக்கு வங்கியை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஏனைய கட்சிகளும் இறங்கிவிட்டன என்று தெரிகிறது.

ரணில் விக்ரமசிங்க இப்போதைக்கு தேர்தல்களை நடத்தப் போவதில்லை. ஆனால் இந்திய விஷயத்தின் பின்னர் அவர் சில சமயம் மாகாண சபை தேர்தலை வைக்க கூடும் என்ற ஊகங்கள் உண்டு. அந்த ஊகங்களும் ஏனைய கட்சிகள் போராட்டக் களங்களில் தோன்றுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்?

காரணம் எதுவாக இருந்தாலும் பெரும்பாலான கட்சிகள் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை நாடகம், நில ஆக்கிரமிப்பு ,சிங்கள பௌத்த மயமாக்கல் போன்றவற்றுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது, சரியாகவோ அல்லது பிழையாகவோ,போராட்ட நெருப்பை ஏதோ ஒரு விதத்தில் அணையவிடாமல் பாதுகாக்க கூடியது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கடையடைப்பும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் அவ்வாறு நெருப்பை அணைய விடாமல் வைத்திருக்கக் கூடியவை. 

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டும், அப்புதைக்குழி தொடர்பான விசாரணைகளை அனைத்துலக நிபுணத்துவ உதவியோடு முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டும், கடந்த வெள்ளிக்கிழமை கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தை நாடகத்தை அம்பலப்படுத்தவும் நிகழும் நிலப்பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல், என்பதற்கு எதிராக கூர்மையான விதங்களில் எதிர்ப்பைக் காட்டவும் இதுபோன்ற போராட்டங்கள் தேவை.

ஆனால் பேச்சுவார்த்தை மேசையில் ரணிலை அம்பலப்படுத்தும் விடையத்தில் விக்னேஸ்வரன் தடுமாறுவதாகவே தெரிகிறது. அவருடைய மிதவாத அணுகுமுறையை ரணில் மிகவும் தந்திரமாக பயன்படுத்துகின்றார். 13ஐ முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்தோடு விக்னேஸ்வரன் முன்மொழிந்த இடைக்கால ஏற்பாடு அல்லது ஆலோசனை சபை என்று அழைக்கப்படுகின்ற ஏற்பாட்டை கெட்டியாகப் பற்றிக்கொண்டு விட்டார். அதன்மூலம் அவர் இந்தியாவையும் சமாளிக்கலாம், உலக சமூகத்தையும் சமாளிக்கலாம். தமிழ்க் கட்சிகளைப் பிரித்து ஆழலாம். கடைசியாக தமிழ் கட்சிகளுக்கும் ரணிலுக்கும் இடையில் நடந்த சந்திப்பு அதைத்தான் காட்டுகின்றது.