Breaking News

கடன் மறுசீரமைப்பு - ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும்  அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். 

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (04)  நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

"சிங்கள வியாபாரம் தெங்கு வியாபாரத்தின் ஊடாகவே ஆரம்பிக்கப்பட்டது. தெங்கு உற்பத்தி ஏக்கலையில் பிரசித்தம் பெற்றதாக காணப்பட்டது. 1970 ஆம் ஆண்டு வரையில் சிங்கள மக்கள் பெருமளவான தெங்கு நிலங்களின் உரிமத்தை கொண்டிருந்தனர். ஆனால், 1972-73 களில் மேற்கொள்ளப்பட்ட காணி மறுசீரமைப்பு காரணமாக சிங்கள வியாபாரிகளின் மூலதன அளவு சரிவடைந்தது. 

சிங்கள வியாபாரிகள் விவசாயத்தில் தேர்ந்தவர்களாக இருந்த போதும் மூலதனச் சரிவின் காரணமாக வீழ்ச்சியை கண்டனர்.  அதன் பின்னர் தென்னந்தோட்டம் 50 ஏக்கர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.  சிறு தென்னந்தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மறைந்த தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தெங்கு தொழிற்சாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 50 வருடங்களில் தெங்கு உற்பத்தியில் அபிவிருத்தியை காண முடியவில்லை.

இருப்பினும் எமக்கு பின்பு தெங்கு உற்பத்தியை ஆரம்பித்த நாடுகள் துரிதமாக முன்னேறி வருவதை காண முடிகிறது. குறிப்பாக பிரேஸில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஹெக்டெயாருக்கு  8000    விளைச்சலை பெறுகின்றன.  நாம் ஒரே இடத்தில் நிற்கும் போது அந்த நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்று இலங்கைக்குள்  82 சதவீமான தெங்கு உற்பத்தியாளர்களுக்கு  20 ஏக்கர் காணியே உள்ளது. பெரும் அளவிலான தெங்கு உற்பத்தியை 18 சதவீத்திலானோர் மாத்திரமே மேற்கொள்கின்றனர். அதேபோல் இலங்கையில்  1.1 மில்லியன் ஏக்கர்களில் மாத்திரமே தெங்கு விளைச்சல் காணப்படுகின்றது.  

எமது தெங்கு உற்பத்தி  ஏக்கருக்கு  7000 ஆக காணப்படுகின்ற போது குருநாகலில் இருந்து  200 மைல் தூரத்திலுள்ள தமிழ் நாட்டில் ஏக்கருக்கு 11,400  தேங்காய் விளைச்சல் பெறப்படுகிறது. தெலுங்கானாவில்  ஏக்கருக்கு 10,000 தேங்காள் விளைச்சல் பெறப்படுவதோடு, மேற்கு வங்காள பகுதிகளில்  ஏக்கருக்கு  12,000 தேங்காய் விளைச்சல் பெறப்படுகிறது.    

அதேபோல் ஆந்திராவில் ஏக்கருக்கு 15,000 தேங்காய் விளைச்சல் கிடைப்பதோடு, எமது உற்பத்தியை போன்று இரு மடங்கைப் பெற்றுக்கொள்கின்றனர். தெங்கு தொடர்பிலான மூன்று நிறுவனங்களையும் ஒன்றிணைக்குமாறு இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அவற்றில் இரு நிறுவனங்களை ஒன்றிணைத்து தெங்கு ஆராய்சி நிறுவனத்தை விவசாயப் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைப்பது பொருத்தமானதாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும். 

தற்போது அரசாங்கத்தினால் விவசாய நவீன மயப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   விவசாயத்தின் ஊடாக மிகவும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். தெங்கு தொழிற்சாலைகளும் அதற்கு தயாராக வேண்டும். தெங்கு உற்பத்தியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும். 

இரண்டு ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரையில் தெங்கு உற்பத்தியை அதிகரித்துக்கொள்வது தொடர்பில் ஆராய வேண்டும். அதேபோல் தெங்கு உற்பத்தியை முழுமையாக வர்த்தகச் சந்தையுடன் இணைக்க வேண்டும். விலைக் கட்டுப்பாட்டினால் ஒருபோதும் வியாபாரம் முன்னேற்றம் அடையப்போவதில்லை. உற்பத்தியை பெருக்கி  தேங்காயின் பெறுமதியை அதிகரிப்பதன் ஊடாகவே தொழிற்சாலைகள் பலனடைய முடியும். அதேபோல் தெங்கு தொழிற்சாலைகளுக்கான முதலீடுகளை கொண்டு வர வேண்டும். முழுமையான தெங்கு உற்பத்தியில் 55 சதவீதமானவை தெங்கு முக்கோண வலயத்திலிருந்தே பெறப்படுகின்றது.  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் 2 ஆவது தெங்கு முக்கோண வலயத்தையும் நிறுவ திட்டமிட்டுள்ளார்.  தெங்கு உற்பத்தியை உலர் வலய பகுதிகளுக்கும் கொண்டுச் செல்வது சிறந்ததாகும்.  

இந்நாடு வங்குரோத்து நாடு, தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.  கடன் நீடிப்பு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த தலைவர்களுடனும் அது குறித்து கலந்துரையாடினோம். 

கடன் நீடிப்பின் பின்னரும் எமது கடன்களை மீளச் செலுத்தாமல் இருக்க முடியாது. கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும்.  அதேபோல் அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதிக்கு அவசியமான கடன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த கடன்களை செலுத்துவதற்கான முறைமையொன்றும் அவசியம். தற்போது உள்ள சம்பிரதாய பொருளாதார முறையினால் அதனை செய்ய முடியாது. அதனால் போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இருப்பினும் அதற்கு முன்னதாக கடன் விவகாரங்களை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதுகுறித்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்பித்துள்ள அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதேபோல் பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். பின்னர் அந்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம். பாராளுமன்றம் அரச நிதிக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கான யோசனை அரச நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி அரச நிதி குழுவின் அனைவரும் திருத்தங்களையும் முன்மொழிந்தனர். அதற்காக அரச நிதிக் குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.   


எதிர்கட்சியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும் எதிர்கட்சிக்குள் காணப்பட்ட உள்ளக பிரச்சினைகளின் விளைவாக அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இன்னும் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தமையும் கவலைக்குரியதாகும். எவ்வாறாயினும் ஆதரவு வழங்கிய அனைவரையும் நினைவுகூறுகிறேன். அது தொடர்பிலான யோசனைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.   

அதற்காக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், பிற்பட்ட காலங்களில் எதிர்கட்சி எம்.பிக்கள் அதனை முன்னெடுப்பதற்கான பல உதவிகளை வழங்கியிருந்தனர். அவர்கள் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. துரதிஷ்டவசமாக அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. சிலர் இதற்கு தடைப்போட முற்படும் போது மற்றைய சிலர் வீதியிலிறங்கி போராட்டம் செய்ய முயற்சித்தனர்.  இருப்பினும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தற்போது நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.  அரசியல் நோக்கங்களுக்கான நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

அதேபோல், இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் நம்முடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடாது. மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு,  என்பன உருவாகும்.  அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும்.  மேற்படி வேலைத்திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. அரசியலமைப்பின்  04 வது உறுப்புரைக்கமைய மக்கள்  இறைமை அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை பாராளுமன்றம் நிறைவேற்றும். ஏனைய செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். அதன்படி நிதிசார் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்திலேயே முன்னெடுக்கப்படும்.  அதனால் பாராளுமன்றத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமையவே அரசாங்கம் செயற்படும். 

நாம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தின் அறிவிப்பின்றி நிறுத்தப்போவதில்லை. அதனால் பாராளுமன்றம் தவிர வேறு எந்த தரப்பினரதும் ஆலோசனைகளையோ நிபந்தனைகளையோ பெற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. அதனால் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுக்கிறேன். 

அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.  சம்பிரதாய அரசியல் முறையினால் இந்நாட்டை முன்னேற்ற முடியாது. மீண்டும் சம்பிரதாய அரசியல் முறையின் ஊடாக நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை. இந்நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். அது தொடர்பிலான நடவடிக்கைகளை பாராளுமன்றத்துடன் முன்னெடுப்பேன்.  குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்பு கூறுவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த முயற்சிகளை வெற்றிகொள்வோம்" என்றார்.    

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன 

"தெங்கு உற்பத்தி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் தெங்கு உற்பத்தியில் காணப்படும் பல்வகைத்தன்மை காரணமாக அதற்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் பால், தேங்காய் சிரட்டை, கார்பன் உற்பத்திகள் ஆகியவற்றிற்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்த தசாப்தத்திற்குள், தென்னை சார் உற்பத்திகளிலிருந்து 02 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.