பதின்மூன்றை வைத்துச் சுத்துவது? நிலாந்தன் கட்டுரை!
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன. 13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது, கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக அது யாப்பில் இருந்து வருகிறது, ஆனால் நடைமுறையில் முழுமையாக இல்லை. அதாவது கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த இலங்கை அரசாங்கங்கள் யாப்பை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று பொருள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், கடந்த 36 ஆண்டுகளாக யாப்பு மீறப்பட்டு வந்துள்ளது.
இப்பொழுதும் அதை முழுமையாக அமல்படுத்த ஜனாதிபதி தயாரில்லை. போலீஸ் அதிகாரங்களைக் கழித்து விட்டுத்தான் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்தலாம் என்று கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. அவருடைய மாமனாரின் வார்த்தைகளில் சொன்னால் ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் முடியாது தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அந்த அதிகாரங்களை பிரயோகித்து யாப்பை முழுமையாக அமுல்படுத்த தயாரில்லை. மாறாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் அதைச் செய்யலாம் என்று கூறுகிறார். ஆனால் நாட்டின் யாப்பின்படி அவருக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை அவர் பிரயோகிக்கத் துணியவில்லை. மாறாக பொறுப்பை நாடாளுமன்றத்தின் மீது போடுகிறார்.
அதேசமயம்,கடந்த ஏழாம் திகதி ஜி.எல்.பீரீஸ் கூறியிருக்கிறார், 13ஆவது திருத்தத்தை மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரத் தேவை இல்லை என்று. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட ஒரு திருத்தம் அது. அதை முழுமையாக நிறைவேற்ற மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்றத்தை நாடுவது என்பது ஜனாதிபதியின் உள்நோக்கங்களை காட்டுகின்றது என்ற தொனிப்பட பீரிஸ் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது என்ன செய்ய வேண்டும்? 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பது யாப்பை முழுமையாக அமல்படுத்துவதுதான். யாப்பை முழுமையாக அமல்படுத்தினால் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் அல்லது அது தீர்வின் தொடக்கமாக காணப்படும் என்றெல்லாம் நம்புவது இனப்பெருச்சினைக்கான தீர்வை யாப்புக்குள் தேடுவதுதான். ஆனால் யாப்புக்குள் தீர்க்கமுடியாத படியால்தான் 2015ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி என்ற அனைத்துலக ஏற்பாட்டை ஐநா.மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்தது.
2015 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30இன் கீழ் ஒன்று ஐநா தீர்மானம் அவ்வாறு நிலை மாறுகால நீதியை-பொறுப்புக்கூறலை பரிந்துரைத்தது. நிலைமாறு கால நீதியின் கீழ் செய்யப்பட வேண்டிய கட்டமைப்புசார் மாற்றங்கள் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். அதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் யாப்புருவாக்கத்திற்காக உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன. 83 தடவைகள் சந்தித்து அந்த யாப்புருவாக்க குழுக்கள் இறுதியில் ஓர் இடைக்கால வரைபைத் தயாரித்தன. அதுதான் சர்ச்சைக்குரிய “எக்கிய ராஜ்ஜிய” என்று அழைக்கப்பட்ட இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைவு நாடாளுமன்றத்தில் முதற் கட்டம் விவாதிக்கப்பட்டு,இரண்டாம் கட்டம் விவாதிக்கப்படுவதற்கிடையில் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.
இவ்வாறு ஒரு புதிய யாப்பை நோக்கி 2015 இல் தொடங்கி 2018 வரையிலும் உழைத்த ரணில் விக்கிரமசிங்க, இப்பொழுது பழைய யாப்பின் ஒரு திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தப் போவதாக கூறுகிறார். அவரோடு இணைந்து 2015இலிருந்து 2018வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக உபகுழுக்களில் அங்கம் வகித்த தமிழ்க் கட்சிகள் அதை அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
யாப்புருவாக்கம் எனப்படுவது இனப்பிரச்சினைக்கான தீர்வில் இறுதிக்கட்டம் தான். அது இன நல்லிணக்கத்திற்கான பரந்தகன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் பிரிக்கப்படவில்லாத ஒருபகுதி.மாறாக யாப்புத் திருத்தமே இனப்பிரச்சினைக்கான தீர்வாகி விட முடியாது.அதிலும் குறிப்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு திருத்தத்தில் இதுவரை காலமும் அமுல்படுத்தப்படாத அம்சங்களை அமுல்படுத்துவது என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமைய முடியாது. தமிழ்க் கட்சிகள் இதனை அழுத்தமாகக் கூற வேண்டும்.
எக்கிய ராஜ்ஜியவுக்கு தயாராகக் காணப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஏன் 13அளித்த தூக்கிப் பிடிக்கிறார்? அதன்மூலம் அவர் இந்தியாவைத் தாக்காட்டலாம்; ஒரு பகுதி தமிழ்க் கட்சிகளைத் தாக்காட்டலாம்; அதன் மூலம் தமிழ் கட்சிகளுக்கு இடையே பிளவுகளை தாக்காட்டலாம்; அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் காலத்தை கடத்தலாம்; முடியுமானால் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அவரைப் பொறுத்தவரை 13ஐ முழுமையாக என்ற நிகழ்ச்சி நிரல் பல்பரிமாணங்களைக் கொண்டது. பல தரப்புகளைச் சமாளிக்க உதவுவது
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையில் அவர் எந்த ஒரு தேர்தலையும் வைக்கப் போவதில்லை. எந்த ஒரு திருப்பகரமான மாற்றத்திற்கும் துணியப் போவதுமில்லை. அவரைப் பொறுத்தவரை பொருளாதாரத்தை ஓரளவுக்கு நிமிர்த்தி, சிங்கள பௌத்த வாக்குகளை எப்படிக் கவர்வது என்பதுதான் இப்பொழுதுள்ள பிரச்சனை. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் இந்தியாவை, தமிழ்க் கட்சிகளை, அனைத்துலக சமூகத்தை, ஐநாவை என்று பல்வேறு தரப்புகளையும் எப்படிச் சமாளிக்கலாம் என்று சிந்திக்கிறார். அதற்குத்தான் இந்த 13ஐ முழுமையாக என்ற நாடகம்.
எனவே ஒரு பகுதி தமிழ் கட்சிகள் 13 ஐ முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது அவருக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் வியூகத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைக்கிறார் என்றுதான் கூறவேண்டும். விக்னேஸ்வரனை பொறுத்தவரை அவருடைய அரசியல் வாழ்வு இந்த நாடாளுமன்றப் பதவியோடு முடிந்துவிடும். அவரோடு சேர்ந்து அவருடைய கட்சியின் வாழ்வும் முடிந்துவிடுமா என்பதே இப்போதுள்ள கேள்வி. அவர் சம்பந்தரை எதிர்க்கும் ஒரு முதலமைச்சராக மேலெழுந்தபொழுது குறிப்பாக தமிழ்மக்கள் பேரவையில் ஓர் இணைத் தலைவராக பிரகாசித்த பொழுது, அவரை நோக்கி எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஒரு ஜனவசியம்மிக்க மாற்றுத் தலைமையாக மேலெழத் தேவையான ஒரு வாய்ப்பை வரலாறு அவருக்கு வழங்கியது; தமிழ் மக்கள் வழங்கினார்கள்: தமிழ் மக்கள் பேரவை வழங்கியது. ஆனால் அவர் எல்லாவற்றையுமே சொதப்பி விட்டார்.
2009க்கு பின்னரான தமிழ் அரசியலுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்கு அவரை முன்னிறுத்தலாமா என்று சிந்தித்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத, அல்லது குற்றவியல் கண்கொண்டு பார்க்கப்படும் ஓர் அரசியல் சூழலில், அவரைப் போன்ற ஒரு முன்னாள் நீதிபதியை முன்னிறுத்துவதன்மூலம் தமிழ் அரசியலுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கலாம் என்று சிந்தித்தவர்கள் அவரை ஒரு மாற்றுத் தலைமையாக முன்னுறுத்தினார்கள். ஒரு மாற்று அரசியல் எனப்படுவது கோட்பாட்டு அடிப்படையில், பெரும்போக்காக காணப்படும் அரசியலுக்கு மாற்றானது.விக்னேஸ்வரன் அவ்வாறான மாற்று ஒழுக்கத்துக்குரியவர் அல்ல. ஆனால் அப்பொழுது பலமாகக் காணப்பட்ட கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைப்பதற்கு அவர் ஒரு பொருத்தமான மாற்றுத் தலைமையாக பார்க்கப்பட்டார் என்பதே உண்மை. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவர் மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
தமிழ் மக்கள் பேரவை எனப்படுவது நவீன தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு.சமூகப் பிரமுகர்களாகக் காணப்பட்டவர்களும் சிவில் சமூகங்களும் அரசியல் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய கூட்டுச்சேர்க்கை அது. அதை நோக்கியும் எதிர்பார்ப்புகள் வளர்ந்தன. ஆனால் எல்லாவற்றையும் கஜேந்திரகுமார் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சேர்ந்து சொதப்பிவிட்டார்கள். எனினும் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதன் ஏகபோகத்தை இழந்ததற்கு விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை என்பவற்றை மையப்படுத்திய அரசியலுக்குப் பெரிய பங்குண்டு.
கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. ஆனால் அந்த இடத்தில் ஒரு மாற்று அணி உருவாக முடியவில்லை. இப்பொழுது கூட்டமைப்பும் இல்லை; பலமான மாற்று அணியும் இல்லை. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகம் வாய்ப்பாக இருக்கிறது. அவர் விக்னேஸ்வரனை தனித்துப் பிரித்து எடுத்து தன்னுடைய புதிய நாடகத்துக்கு அவரை எப்படிப் பங்காளியாக மாற்றலாம் என்று சிந்திக்கின்றார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனும் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைகளின் சிற்பி என்று கருதப்படுகின்ற கலாநிதி விக்னேஸ்வரனும் இணைந்து தயாரித்த மாகாண சபைகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனைக் கட்டமைப்பு என்ற ஒரு பரிந்துரையை ரணில் விக்கிரமசிங்க தந்திரமாகப் பற்றிப்பிடித்து விட்டார்.
எனினும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை தொடர்ந்து கொண்டு போக முடியாது. ஏனைய கட்சிகள் குழப்பும் பொழுது நாடகம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் முடிவில் என்ன மிஞ்சும் ? தமிழ் மக்கள் மத்தியில் பலமான கூட்டுக்களும் இல்லை; பலமான மாற்று அணியும் இல்லை; இனப்பெருச்சினைக்குத் தீர்வும் இல்லை; தீர்வுக்காகப் போராட கட்சிகளும் இல்லை; மக்கள் அமைப்புகளும் இல்லை என்ற ஒரு பரிதாபகரமான நிலைமைதான் தொடர்ந்தும் இருக்கப் போகிறதா?