இராணுவத்திற்கு வெள்ளையடிக்கிறதா யாழ் இந்துக்கல்லூரி?
அண்மையில் யாழ் இந்துக்கல்லூரியில் இராணுவ பிரசன்னம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் இடம்பெற்றுவந்தது.
அது இராணுவமல்ல என ஒரு தரப்பும், இராணுவ சீருடை போன்ற சாரணர் அமைப்பு எனவும் சமாளிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
உண்மையிலேயே என்ன நடைபெறுகிறது?
அங்கே வந்தது இனவழிப்பு இராணுவம் மட்டுமல்ல அந்த அனவழிப்பு இராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் தலைமையிலான குழுவினரே வந்திருக்கிறார்கள்.
தேசிய மாணவர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ் பொன்சேகா யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் 20படையணி கட்டளை அதிகாரி தலைமையிலேயே இந்த நிகழ்வு யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
1772 இல் பெயர்மாற்றம் பெற்ற தேசிய மாணவர் படையணி பின்னர் 1988 இல் இராணுவ துணைப்படையாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது மாற்றப்பட்டது.
இதன் தலைவராக பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா இப்போது பதவியில் இருக்கிறார்.
இதற்கு முன்னரும் அனைவரும் இராணுவ பிரிகேடியர்களே
முன்னரும் அனைத்து கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே காணப்படுகிறது.
இது யாழ் இந்துக்கல்லூரியில் மட்டுமல்ல நாட்டில் பெரும்பாலான பாடசாலைகளில் அண்மைக்காலமாக தேசிய மாணவர் படையணி என்ற பெயரில் இராணுவத்தினரின் உள்நுளைவு இருந்தே வருகிறது.
முன்னணி பாடசாலைகள் இராணுவத்தினரை பாடசாலைகளுக்குள் அனுமதிப்பதும், அவர்களுக்கு மாலையிட்டு வரவேற்பதும் ஊக்கப்படுத்துவதும் மிகவும் வேதனையானது.
இது இனவழிப்பு இராணுவத்தினருக்கு வெள்ளையடிக்கும் வேலையாகவே அமைவதோடு எதிர்கால மாணவர்களுக்கு எமக்கு நடைபெற்ற இனவழிப்பு மற்றும் வரலாற்று திரிப்புக்களை மூடி மறைப்பதற்கு முன்னணி பாடசாலைகளே முன்மாதிரியாக இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்கு பாடசாலை அதிபர்கள் உடந்தையாகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதே யாழ் இந்துக்கல்லூரிதான் யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் இந்தி வகுப்புக்களை ஆரம்பித்த பாடசாலை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
இது தொடர்பில் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிக அவதானத்துடன் இருப்பதோடு இவ்வாறான இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு இயன்றவரை தமது எதிர்ப்புக்களை காட்டவேண்டும்.
இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறதா? இல்லையே!
இராணுவ தளபதிகளை அழைத்தால்தான் பாடசாலைக்கு நிதி உதவி செய்வோம் என்று அரசு சொல்கிறதா? இல்லையே!
பாடசாலைகள் மீது குண்டு போட்டவர்களை,
பாடசாலை மாணவர்களை கொன்று புதைத்தவர்களை,
பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களை,
பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்கலாமா?
இந்த இனப்படுகொலையாளிகளை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் குரல் எழுப்பும் வேளையில்,
இந்த இனப்படுகொலையாளிகளுக்கு கனடா அரசு பயணத் தடை விதித்திருக்கும்வேளையில்.
யாழ் நகரில் புகழ் பெற்ற பாடசாலையே இனப்படுகொலையாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது முறையோ?
முழந்தாளிட்டு இப்படி வாழ்வதைவிட
எழுந்து நின்று மடிவது மேல்!
இது முன்னாள் பல்கலை மாணவர் ஒன்றிய தலைவரிக் பதிவு
என் இனிய பள்ளியே ஏன் மறந்தாய்?
காலவடுவைக்கரைத்துவிட்டு
ஆலாத்தியா எடுக்கிறாய்
தந்தையை புதைத்து தாயின் மாலையைப்பறித்தவனுக்கு
மாலையாபோடுகிறாய்?
சாவின் ஓலங்கள் காதில் ஒலிக்க
நாம் எத்தனை பள்ளி உறவுகளை கண்முன்னேயிழந்தோம்
எல்லாம் மறந்து நீ இனப்படுகொலையாளிகளை
விருந்தாளிகளாயா அழகுபாக்கிறாய்?
காலக்கொடுமை ஐயகோ!
மன்னிக்கலாமா? மறக்கலாமா?
என் தங்கையையின் தம்பியின்
தந்தையின் தாயின்
கணவனின் மனைவியின்
இன்னும் எத்தனை பேரின்
அங்கங்களைப்பறித்த அரக்கர்களுக்கு
கைகூப்பி சலாமா போடுகிறாய்?
அன்று நாங்கள் வகுப்பறையில் படித்த காலங்களை விட
நிலவறைக்குள் படுத்த காலங்கள் அதிகமென்ற வரலாற்றையா மறந்தாய்?
அன்று எங்கள் வெள்ளைச் சீருடைகள்
குருதிகளாக்கப்பட்ட கதையையா மறந்தாய்?
அன்று நாங்கள்
படிக்க வேண்டிய பாடத்தை தொலைத்து
கிரகிக்க வேண்டிய கல்வியைத்தொலைத்து
கிபிரும் மிக்கும் வந்துவிடுமென்று ஏக்கத்தோடும் பயத்தோடும் கிடந்ததையா மறந்தாய்?
அன்று எங்கள் சோதரிகள் இந்தக்கயவர்களின் கட்டளையில் பள்ளிச்சீருடையிலே சதைத்துண்டங்களாக்கப்பட்டதையா
மறந்தாய்?
எங்கள் கல்வியை சீர்குலைத்து
எங்கள் கல்வி கனவை கண்முன்னே
அழித்த கயவர்களுக்கு மாலைபோட்டு நீ மண்டியிடுவதை வரலாறு என்றும் மன்னிக்காது.
எஸ்.தவபாலன்