Breaking News

கலிபோர்னியாவில் பரிசு வென்ற உலகின் மிக பெரிய பூசணிக்காய்!

 


அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் விவசாயிகளுக்கு ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் நடைபெற்ற அந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் (Travis Greiger) என்பவரும் கலந்து கொண்டார்.

இவர் வளர்த்த பூசணிக்காய் மிக பெரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டார். டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது.

அவர் தோட்டத்தில் விளைந்த 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை பலரும் கண்டு வியந்தனர். டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வலராக செயல்பட்டு வருபவர்.

டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) எனும் உணவு வகைகளை சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய் டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.