Breaking News

உலக கோப்பை போட்டி.. குஜராத் செல்லும் ரஜினிகாந்த்!

 


இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குஜராத் செல்கிறார். அதாவது, ஒருநாள் உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்த போட்டியே காண குஜராத் செல்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஆகியோருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.