அதிக விலையில் விற்கப்படும் சீனி!
2020 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கான 25 சதமாக இருந்த விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து நேற்று (03) சீனியின் விலை அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து தனியார் கடைகளில் மட்டுமன்றி சதொச விலும் சீனியின் விலை அதிகரித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நுகர்வோர் அதிகாரசபை நேற்று இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொதி செய்யப்படாத ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாக இருக்க வேண்டும்.
பிரவுன் சீனி ஒரு கிலோவுக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 330 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட பிரவுன் சீனியின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் சீனி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.