கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் மற்றும் பல்வேறு சுவாச நோய்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால், நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் வருகைதரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முகக்கவசம் அணிவதன் மூலமும், முன்னதாக அறிவிக்கப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலமும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது பரவி வரும் வைரஸ் நோயானது கொரோனா அல்லது இன்புளுயுலன்சா என்பது குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையை வழங்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும், மக்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.