லைகா நிறுவனம் சொத்துக்களை முடக்க வேண்டும்- விஷால் கோரிக்கை!
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சண்டக்கோழி 2'. இந்த படத்தை விஷால் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்லைட் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது, ரூ. 23 கோடியை 22 லட்சம் அளவிற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், இந்த படத்தை உரிமம் பெற்ற லைகா நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட ஜி.எஸ்.டி தொகையை செலுத்தாததால் அதனுடைய அபராதத்துடன் சேர்த்து ரூ.4 கோடியை 88 லட்சத்தை தான் செலுத்தியதாக விஷால் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பான மனுவில், பல இடங்களில் கடன் பெற்று ரூ.500 கோடி செலவில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகும். அப்போது தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லைகா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தான் செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5 கோடியை 24 லட்சத்து 10 ஆயிரத்திற்கு உத்தரவாதம் செலுத்த வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து இந்த வழக்கு முடியும் வரை ஆர்.பி.எல் வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துக்களை முடக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 19-ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.