Breaking News

தமிழரசு பொதுச்செயலாளர் தெரிவில் குழப்பம்(காணொளி)


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் இடையே இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை எட்ட முடியாமையின் காரணமாக அவ்விதமான முடிவுக்கு தான் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய நிருவாகத்தினை அங்கீகரிப்பது தொடர்பில் பொதுச்சபைக்குள் ஏற்பட்ட குழப்பித்தினை அடுத்து நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும் எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதல்நாள் இன்றைய தினம் திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது முற்பகல் மத்தியகுழு கூட்டமும், பிற்பகலில் பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது.

மத்திய செயற்குழுக் கூட்டம் 

அதனடிப்படையில் மத்திய செயற்குழு கூட்டம் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமானது. இதன்போது முதலில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, ஞானமுத்து சிறிநேசன், குலநாயகம் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் அப்பதவியை வகிப்பதற்கு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினார்கள்.

எனினும் அதன் பின்னர் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் மதிய போசனத்துக்கான இடைவேளை விடப்பட்டதோடு தொடர்ந்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வு ஆரம்பமானது.

பொதுச்சபைக் கூட்டம்

பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியதும் மீண்டும் பொதுச்செயலாளர் நியமனம் சம்பந்தமாக சர்ச்சைகள் ஏற்பட்டன. உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு நிலைமைகள் மோசமாகின. இதனையடுத்து பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான முன்மொழிகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்களில் சிலர் நிருவாகத்தெரிவினை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, பொதுச்செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதனால், பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பொதுச்செயலாளர் தெரிவிக்கான பகிரங்கமான வாக்கெடுப்பினை நடத்துமாறு கோரினார்கள்.

 

எனினும், குறித்த நிருவாகத்தெரிவுக்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் தனியொரு பதவிநிலைக்காக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தவிர்ந்த புதிய நிருவகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணையை கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்தார். அதனையடுத்து, பீற்றர் இளஞ்செழியர் அதனை வழிமொழிந்தார்.

தொடர்ந்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவினையும் எதிர்ப்பினையும் வெளியிட்ட நிலையில் அதனடிப்படையில் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேரணை எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கமுடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். ஏனெனில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நிருவாகத்தெரிவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பங்கேற்பின்றியே பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் வாக்கெடுப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் உறுப்பினர்களிடையே சார்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்தன.

இந்த நிலைமையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த மாவை.சோ.சேனாதிராஜா உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக நாளை நடைபெறவுள்ள பகிரங்க தேசிய மாநாட்டை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியபோதும் நிலைமைகள் சுமூகமடைந்திருக்கவில்லை.

இதனையடுத்து மாவை.சோ.சேனாதிராஜா ஒலிவாங்கியைப் பெற்று 17ஆவது தேசிய மாநாட்டை தான் ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு கூட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.