சத்யராஜ் கூட சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்- விஜய் சேதுபதி!
ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "படத்தின் டிரைலரை பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக 'சிங்கப்பூர் சலூன்' என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.
கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குனர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்." என்றார்.