Breaking News

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வடக்கு நோக்கி நகர்கிறது!

 


1986-ம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது. அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டி, ஒரு பனித் தீவாக மாறியது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்த பல் வடிவ பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. அதன் தடிமன் 1,312 அடி ஆகும். இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.

இந்த பனிப்பாறை கடந்த 2022-ம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏ23ஏ பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் இறுதிப் பயணமாக வடக்கு நோக்கி செல்கிறது. தற்போது யானைத் தீவு மற்றும் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு இடையே நகர்கிறது. இந்த பனிப்பாறை ஒரு டிரில்லியன் டன் தண்ணீரைக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அண்டார்டிக் சர்வேயின் ஆண்ட்ரூ பிளெமிங் கூறும் போது, "2020-ம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நகருவது தெரிந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஏ23ஏ அதன் பனிக்கட்டிகளில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது" என்றார்.