விஜய் நடிக்கும் GOAT படத்தில் தோனி??
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக, 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் நேற்று கேரளா சென்றார். கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
நேற்று விஜய் ஏறிய காரில் மக்கள் அலை போல திரண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
விஜய் அனைவரிடமும் சிரித்தபடியே ரசிகர்களின் அன்பை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் காட்சியை படமாக்கவுள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் போஸ்டர்களையும் தோனி பட போஸ்டர்கலையும் ஒட்டி இருக்கின்றனர் படக்குழுவினர். ஆதலால், படத்தில் தோனி கேமியோ ரோல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.
இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தி வரும் தோனி, GOAT படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.