Breaking News

யாழ்ப்பாண வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் : ஜனாதிபதி உறுதி!

 


யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்திற்கு தேசிய வைத்தியசாலையை வழங்குமாறு நீங்கள் அனைவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தீர்கள்.

கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி வழங்கினோம்.

அத்துடன், யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மத்திய மாகாணங்களிலும் நல்லதொரு வைத்தியசாலை அமைப்பு ஏற்படுத்தப்படும்.

நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமர் என்ற ரீதியிலும், ஜனாதிபதி என்ற ரீதியிலும் நான் எப்போதும் இங்கு வருகிறேன்.

ஏனெனில் யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் இல்லாமல் வேலை தேடும் மக்கள் இங்கு உள்ளனர்.

யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை வலுவாக உள்ளது.

யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது.

தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல பிரச்சினைகள் உள்ளன.

எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை, அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன.

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல் போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன்.

காணாமல் போனோர் அலுவலகம் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதை அப்படியே செய்ய வேண்டும். அத்துடன், வட மாகாணம் அதிக அபிவிருத்தி சாத்தியம் கொண்ட மாகாணம் என்றே கூற வேண்டும்.

இந்த மாகாணத்தில் மிக உயர்ந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளது.

நிச்சயமாக யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய ஆற்றல் மையமாக கட்டியெழுப்ப முடியும்.

மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.