Breaking News

பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.

 


மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப் போராட்டம் மொத்தம் 38 ஆண்டுகள். இதன் அரைவாசிக்காலம் 19 ஆண்டுகள்.எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்கள் எதை பெற்றார்கள்? எதைப் பெறவில்லை? என்ற தொகுக்கப்பட்ட அறிவு அவசியம்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்தில் கட்சி அரசியல்தான் பெருமளவுக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது.மக்கள் இயக்கமோ அல்லது போராட்ட இயக்கமோ அங்கு கிடையாது. கட்சிகள்தான் போராடுகின்றன. கட்சிகள்தான் பேச்சுவார்த்தைக்குப் போகின்றன.கட்சிகள்தான் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீல் செய்கின்றன. இக்கட்சி அரசியலைத் தொகுத்து பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெற்றவை பெறாதவை எவை ?

தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி, முடிவில் தமிழரசுக் கட்சி மிஞ்சியது. அதற்குள்ளும் இப்பொழுது உடைவு.கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஓர் உடைவு. கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஏனைய கட்சிகள் இணைந்து தங்களுக்கு இடையே கூட்டணி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றன. ஆனால் அது ஒரு சிறிய கூட்டு. அதன் வாக்குப் பலத்தை இனிமேல்தான் அளவிட வேண்டும். இப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கூட்டுக்கள் உருவாகவில்லை. பெரிய கூட்டுக்கள் உடைந்துவிட்டன என்பதே சரியானது. அதேசமயம் கட்சி அரசியல் போதாது, அல்லது கட்சி அரசியல் தோல்விகரமானது, கட்சிகளை வைத்து ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்த முடியாது என்று கூறும் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்புகளும் தொடர்ந்து முன்னேறவில்லை.

கடந்த 15 ஆண்டுகளிலும் அவ்வாறு மூன்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவது முயற்சி தமிழ் மக்கள் பேரவை.அது ஒரு அருமையான சேர்க்கை. கட்சிகளும் புத்திஜீவிகளும் சிவில் சமூகங்களும் இணைந்தன. ஆனால் அந்தக் கூட்டு ஒரு பிரமுகர் மையக் கூட்டு. சமூகத்தில் ஏற்கனவே பிரபல்யங்களாக இருந்த நபர்கள் இணைந்து விக்னேஸ்வரன் என்ற ஒரு முதலமைச்சரை மையமாக வைத்து அதைக் கட்டி எழுப்பினார்கள்.அது மேலிருந்து கீழ் நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஒரு பிரமுகர்மைய அமைப்பு. அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் நின்று பிடிக்கவில்லை. அதன் தோல்விக்கு முக்கியமாக அது ஒரு காரணம். அது தவிர விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியை துறந்த பின் தமிழ் மக்கள் பேரவையை ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக மாற்றி அதை வழிநடத்த விரும்பவில்லை.இது இரண்டாவது காரணம்.

மேலும் தமிழ் மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பயன் பொருத்தமான ஒரு ஐக்கியம் நிலவவில்லை.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்டத்துக்கு மேல் நின்றுபிடிக்க முடியவில்லை. அதன்பின் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு தமிழ் மரபுரிமை பேரவை என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.அது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒர் ஆர்ப்பாட்டத்தை செய்தது.சிவில் சமூகங்களின் சந்திப்புகளில் அதன் முக்கியஸ்தர்கள் அவேசமாகவும் தர்கபூர்வமாகவும் தீவிரமாகவும் உரையாடுவார்கள். ஆனால் அந்த அமைப்பின் மையமாக காணப்பட்ட ஒருவர் உலகப் பெரு நிறுவனம் ஒன்றில் உயர் பதவி பெற்றதோடு அந்த அமைப்பு அரசியல் பரப்பில் இருந்து காணாமல் போய்விட்டது.

மூன்றாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான கட்டமைப்பு. அது கடந்த 15 ஆண்டுகளிலும் மிகப்பெரிய மக்கள் எழுச்சியை ஒழுங்குபடுத்தியது. அந்த மக்கள் எழுச்சியின் பெயரால் அது தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. ஆனால் அந்த மக்கள் எழுச்சியின் அடுத்த கட்டமாக அந்த அமைப்பை மக்கள் மயப்படுத்தி ஒரு நிறுவனமாக வளர்த்தெடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவையை போல அது அரங்கில் இருந்து முற்றாக அகன்று விடவில்லை. அதன் இணைத் தலைவரான வேலன் சாமியார் தொடர்ந்தும் போராட்டக் களங்களில் காணப்படுகின்றார். ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு வெற்றிகரமான ஒரு மக்கள் இயக்கமாக வளரவில்லை.

இதுதான் தாயகத்து அரசியல் நிலவரம்.அதாவது கட்சிகளும் உடைந்து உடைந்து சிறுத்துக் கொண்டு போகின்றன. மக்கள் அமைப்புகளும் தோன்றி மறைகின்றன. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் திருப்திப்படும் ஒரு நிலைமை தாயகத்தில் இல்லை.

அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழர்களை எடுத்துக் கொண்டால் அங்கு நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் எதுவரை முன்னேறி யிருக்கிறார்கள்?
ஐநாவை நோக்கிய செயற்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான முன்னேற்றங்கள் எவையும் இல்லை. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு இயங்குகின்றது. ஆனால் அது மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அமைப்பு. தமிழ் மக்கள் கேட்டது போல பலமான ஒரு கட்டமைப்பு அல்ல. மேலும் ஐநா மைய அரசியல் எனப்படுவது தமிழ் அரசியலை மனித உரிமைகள் பேரவை என்ற பெட்டிக்குள் கட்டி வைத்திருக்கின்றது.இந்த வரையறை காரணமாக ஐநா மைய அரசியலில் தமிழ் மக்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியவில்லை.

அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் தாயகத்துக்கு அடுத்தபடியாக அதிகம் தமிழர்கள் வாழும் ஒரு நாடு கனடா. அங்கே தனிப்பட்ட நபர்களும் சில அமைப்புகளும் முன்னெடுத்த தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, கனேடிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மூத்த இரண்டு ராஜபக்சங்களுக்கும் எதிராகத் தடை வந்திருக்கிறது. சில படைத்தளவாதிகளுக்கு எதிராகவும் தடை வந்திருக்கிறது. கனேடியப் பிரதமர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தைப் பொறுத்தவரை,கனேடியத் தமிழ்ச்சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

எனினும், அதே கனேடியத் தமிழர்கள் மத்தியில் இருந்துதான் இமாலயப் பிரகடனமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தோடு முழுமையாக கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு பிரகடனம் அது. பௌத்த மகா சங்கத்தோடு அவ்வாறான ஒரு பிரகடனத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பெருமளவுக்கு நீர்த்துப் போகச்செய்யப்பட்டுள்ளன.புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்று தாயக அரசியலின் மீது எவ்வாறு எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்தலாம் என்பதற்கு அது ஒரு ஆகப் பிந்திய உதாரணம். எனினும் அந்தப் பிரகடனத்திற்கு எதிராக பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கிளர்ந்து எழுந்தன. விளைவாக, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து எதிர்ப்பை காட்டின.கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை அந்த அடிப்படையிலாவது ஒன்றாக நின்றன.

எனவே, இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகள்; பெற்ற அடைவுகள் எவை எவை என்பதனை கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய அரைவாசி காலகட்டத்தை தமிழ் மக்கள் கடந்துவிட்ட பின்னரும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்கள் தொடர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியவில்லை. அதுபோலவே தாயகத்திலும் கட்சி அரசியலைக் கடந்து ஒரு மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், மற்றொரு மே 18 வருகின்றது. அதையொட்டி தாயகத்தில் “தமிழ் சிவில் சமூக அமையும்” ஒரு அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது.அதுதொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் ஒழுங்குபடுத்தியது. அதுபோலவே இனிவரும் கிழமைகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நினைவு கூர்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்படும்.மே 18 வரையிலும் நிலைமைகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தாமரை மொட்டு கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால், தனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரிய அளவில் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். அதேசமயம் தனிச்சிங்கள வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ராஜபக்சக்களின் கட்சியில் தங்கியிருக்கும் காரணத்தால், அவரும் தனிச்சிங்கள வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நினைவுகூர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடுவாரா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் அதுகூட ஒரு விதத்தில் நன்மையாகத்தான் முடியும். ஏனென்றால், இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல, கடந்த 15 ஆண்டுகளாக தேங்கிப் போயிருக்கும் தாயகத்து அரசியலில் ஒடுக்குமுறைதான் குறைந்தபட்சம் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கடந்த 15 ஆண்டுகளாகவும் அதுதான் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பவோ அல்லது தமிழ் கட்சிகள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு பெரிய கூட்டை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக எதிரியின் ஒடுக்குமுறைகள்தான் அவர்களை விழித்தெழு வைத்திருக்கின்றன. ஒடுக்குமுறைதான் அவர்களைப் புதிய பெரிய அணிச் சேர்க்கையை நோக்கி உந்தித் தள்ளுகின்றன.அல்லது எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்படும் தேர்தல்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றின் விளைவாகத்தான் தமிழ்மக்கள் அவ்வப்போது சீண்டப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் அமைப்புக்கள் தோன்றிய காலகட்டம் அல்லது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பேரெழுச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்ட காலகட்டம் எவை என்று பார்த்தால், இரண்டு சந்தர்ப்பங்களில் அவ்வாறு எழுச்சிகளும் அமைப்புகளும் உருவாகியுள்ளன.

முதலாவது சந்தர்ப்பம்,ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் அதிகரிக்கும் ஜனநாயக வெளி. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமை பேரவை போன்றன தோன்றின. இரண்டாவது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்படும் எழுச்சிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான எழுச்சி அத்தகையதுதான்.

இரண்டாவது சந்தர்ப்பம், தேர்தல்கள் அல்லது அரசாங்கத்தின் புதிய நகர்வுகள் அல்லது ஐநா மனித உரிமை கூட்டத்தொடர். இந்த வெளித் த்தரப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக தமிழ் மக்கள் ஏதோ ஒரு ஐக்கியத்துக்கு போவார்கள். அல்லது ஏதோ ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அதாவது தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக ஒடுக்குமுறைதான் காணப்படுகின்றது. அரசறிவியலில் இதனை எதிர்வினை ஆற்றும் அரசியல் என்று கூறுவார்கள். எதிரியின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்படும் தரப்பு காட்டும் எதிர்ப்பு. அதேசமயம் தானாக ஒரு தேசத்தை கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் மக்கள் அமைப்புகளை உருவாக்கி அல்லது கட்சிக் கூட்டுகளை உருவாக்கி தமிழரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லமுடியாத ஒரு அரசியல் போக்கு. இந்தப் போக்கை உடைத்துக்கொண்டு தமிழ்மக்கள் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் போராட்ட அமைப்புகளையும் கட்சிக் கூட்டுக்களையும் உருவாக்கி தொடர்ச்சியாகப் போராடுவதுதான் நினைவுகூர்தலை அதன் முழுமையான பொருளில் செய்வதாக அமையும்.