மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!
கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை உரிய காலத்தில் எம்மால் முடிக்க முடியவில்லை.
ஆனால் இன்று நாம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இன்று கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம்.
இந்த பிரதேசத்தில் வலுசக்தித் திட்டங்களை மீள உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.
கிளிநொச்சியில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் நாம் ஏற்கனவே வழங்கியுள்ளோம்.
இந்தப் பிரதேசங்களில் உள்ள காணிப்பிரச்சினைகள் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
எமது நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இருக்கவில்லை.
அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, பெண்களுக்கான இரண்டு புதிய சட்ட மூலங்களை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
பெண்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,
அதற்கேற்ப அந்த சட்டத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியும். மேலும், வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும்.
இந்த பெண்கள் உரிமை சட்ட மூலங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
அந்த சட்ட மூலங்களை அனைவரும் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.