ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் ஏன் தமிழர்களுக்குத் தீர்வு தர முடியாது? : சாணக்கியன் கேள்வி!!
தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்பட இல்லை.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தரப்பினராகவே நாம் இருந்து வருகின்றோம். இந்நிலையில் இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பல விடயங்களைக் கூறிவருகின்றார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் எந்த அபிவிருத்திகளை மேற்கொண்டும் பயனில்லை என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் சர்வதேச நாணயநிதியம் பற்றியும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது வெறும் கனவு என்பதையும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கதைகளைக் கூறியும் தமிழ்த் தலைவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியும் தமிழ் மக்களை ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வைக்கலாம் என நினைக்கின்றனர்.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான உரிமம் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்துள்ளன.
எனினும், பாரிய குற்றங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய ஜனாதிபதிக்கு எந்த எண்ணமும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.