விரைவில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் -ரணில் விக்ரமசிங்க!
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையினைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று, Sands Active தனியார் நிறுவனமானது மெல்டோல் எனும் புதிய மருந்து வகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தலைவலிக்கான மருந்தாகும்.
இந்த மருந்து உற்பத்திச்சாலைக்குள் புதிய மருந்து வகையை உற்பத்திச் செய்வதற்கான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மருந்துகளை மீள் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதன் பலனாகவே இன்று இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. இதன்மூலம் உள்நாட்டு சந்தைக்கு மருந்து விநியோகிக்கும் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் வாயிலாக இளைஞர் யுவதிகளுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் உதயமாகியுள்ளன.
இவ்வாறான நல்ல தொழில் துறைகள் நாட்டுக்கு அவசியம். தொழில் இன்மை நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோரும் பெருமளவில் உள்ளனர். தொழில் இன்மை மற்றும் வாழ்க்கைச் செலவை குறைக்கும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது முதற் கடமையாகும்.
அதற்காக நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இதனால் மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது.
ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம்.
அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தற்போது அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்தை சமர்பித்துள்ளது. அதற்குள் பல இலக்குகள் உள்ளன.
2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 5 வீதமாக காணப்பட வேண்டும்.
இதுவரையில் பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்திலேயே காணப்படுகிறது. அதனால் 2027 இற்குப் பின்னர் 8 வீத வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தேவையும் உள்ளது.
நாடு அபிவிருத்தி அடையும் போது 15 வருடங்களுக்கு 8 வீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டின் தொழில் இன்மை பிரச்சினையை 2025 ஆம் ஆண்டளவில் 5 வீதமாக மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டை பொறுப்பேற்றாலும் அந்த இலக்குகளை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதனால் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான முதல் அடியை வைத்திருக்கிறோம்
அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் நாட்டின் இளையோருக்கு நல்ல நாடு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.