Breaking News

சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் – யாழ். பல்கலை (காணொளி)


எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசும் மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ. அபிஷேக் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கரி நாள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக,
வடக்கில் கிளிநொச்சியிலும்,
கிழக்கில் மட்டக்களப்பிலும்,
பெப்ரவரி 4ஆம் திகதி காலை 10.00 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,
“எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி கல்வி என நாங்கள் நம்பினோம். எங்களது மக்களின் நலனுக்காகவே பல்கலைக்கழகங்களுக்கு வந்தோம். ஆனால் தற்போது, நாம் எந்த நோக்கத்திற்காக கல்வியைத் தேர்ந்தெடுத்தோமோ, அந்த நோக்கம் பின்னோக்கி தள்ளப்படுகின்ற நிலை காணப்படுகிறது” என தெரிவித்தார்.

ஒரு காலத்தில் தமக்கான நில உரிமைக்காக போராடியவர்களே தமிழ் மக்கள் என குறிப்பிட்ட அவர்,
“இன்றைய அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களை ஒன்றிணைத்து பயணிப்போம் என கூறினாலும், தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை எவ்வளவு விரைவாக நிறுத்துகிறீர்களோ, அவ்வளவு விரைவாகவே இந்த நாட்டை ஒன்றிணைக்க முடியும்” என சுட்டிக்காட்டினார்.

மேலும்,
“அரசாங்கம் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற நிலை தொடர்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், இளைஞர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.