Breaking News

உறுப்பினரை வெளியேற்றி சபையை நடத்த முடியும்– தவிசாளர்





மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிய பின்னரும் சபையை நடத்த முடியும் என கூறி பெண் உறுப்பினரிடம் கடுமையாகப் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற சபை அமர்வின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் அறியவருவது என்னவெனில், குறித்த பெண் உறுப்பினர் மயானம் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து பேசுவதற்காக நீண்ட நேரமாக எழுந்து நின்று வாய்ப்பு கோரியிருந்தார். எனினும், ஆரம்பத்தில் அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதேவேளை, மற்ற உறுப்பினர்கள் சபையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

பின்னர் அவருக்கு பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது கருத்தை தெரிவிக்கத் தொடங்கியபோது, மற்ற இரண்டு உறுப்பினர்கள் இடையூறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் உறுப்பினர், அந்த உறுப்பினர்களை கடுமையாகக் கண்டித்தார்.

அதனைத் தொடர்ந்து தவிசாளரை நோக்கி அவர், “எனது கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒப்புக்கொண்டால் ‘ஆம்’ என்று சொல்லுங்கள்; இல்லையெனில் ‘இல்லை’ என்று கூறுங்கள்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தவிசாளர், “நீர், நான் என்று பேச முடியாது. அவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேவையானால் எனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிய பின்னரும் சபையை நடத்த முடியும். கவனமாகப் பேச வேண்டும்” என்று எச்சரித்தார்.

இதனால் சபையில் சில நேரம் அமளி நிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.