Breaking News

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனில் ஒலித்த தமிழர் குரல்

லண்டன், ஆகஸ்ட் 30: சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிராகவும் லண்டனில் இன்று (30) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், அவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 


தொடர்ந்து, பிற்பகல் 12 மணியளவில் அதே இடத்திலிருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்ட பேரணி, லண்டன் நகரின் முக்கிய வீதிகள் ஊடாக பயணித்து, ஐக்கிய இராச்சிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 Downing Street முன்பாக பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது. லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிக்கான கோரிக்கையை வெளிப்படுத்தினர். 





“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்; குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும்” என்ற கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தபோதிலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிக்குரல் லண்டன் வீதிகளில் மீண்டும் வலுவாக ஒலித்தது.