Breaking News

தேர்தல் தொடர்பில் 600 முறைப்பாடுகள்- கபே

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை சுமார் 600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது.


இவற்றில் சுமார் 53 முறைப்பாடுகள் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் என்று கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இவை தவிர சுமார் 542 முறைப்பாடுகள் தேர்தல் சட்டதிட்டங்கள் மீறல் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வன்முறைச் சம்பவங்களில் குண்டசாலை மற்றும் தெரணியகலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளரின் அலுவலகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுடகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை இனம் கண்டு தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக கபே அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் கபே அமைப்பு முறைப்பாடொன்றைப் பெற்றுள்ளது.