Breaking News

ராஜபக்ச குடும்பம் தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளது-மைத்திரி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   


நாட்டில் தற்போதுள்ள தனிமனித அதிகாரத்திற்கு முடிவு கட்டவே நான் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளேன்'' "ஜனவரி 8ஆம் திகதி எனது வெற்றி உறுதி. எனது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.    எனது வெற்றி மக்களின், ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் வெற்றியாகும். அதேபோல், தனிமனித அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வெற்றியுமாகும்.

 ஜனாதிபதியும், ராஜபக்‌ச குடும்பமும், அவரது அடிவருடிகளும் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர்.    இதனால் வெறிபிடித்து எமது மேடைகளை உடைத்து சேதப்படுத்தியும், ஆதரவாளர்களைப் பயமுறுத்தித் தாக்கியும் வருகின்றனர். அவர்கள் ஆயுத பலத்தால் வெற்றிபெறலாம் என நினைக்கின்றனர். ஆனால், நான் மக்கள் பலம் கொண்டு வெற்றி பெறுவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

 தேர்தல் நெருங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள கடிகாரம்,கையடக்கத் தொலைபேசி, கூடாரம், கதிரைகள், கூரைத்தகடுகள், சைக்கிள்கள், உலர் உணவுப் பொதிகள், பணம் தருவார்கள்.    அவை அனைத்தையும் கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள். 8ஆம் திகதி உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும், நாட்டினதும் எதிர்காலம் கருதி அன்னம் சின்னத்திற்கு புள்ளடி இடுங்கள். நாம் முன்னுதாரணமாக ஆட்சி செய்வோம். 

 மகிந்த, தேர்தல் சட்டதிட்டங்களை மீறிச் செயற்படுகிறார். அவரது ஆதரவாளர்கள் எம்மைப்பற்றி போலியான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இதையெல்லாம் மக்கள் நம்பிவிடக்கூடாது. எமது வெற்றியைத் தடுக்க அடக்குமுறைகளைப் பிரயோகிக்க முயல்கின்றனர்.    மக்கள் எம்முடனேயே உள்ளனர். 

சமூகத்தையும் நாட்டையும் நாசமாக்கும் போதைப்பொருள் வியாபாரம், எதனோல், கசிப்பு, கசினோ போன்ற கீழ்த்தரமான வியாபார நடவடிக்கைகள் நாட்டில் மும்முரமாக இடம்பெறுகின்றன. இதை யார் செய்கிறார்கள், யார் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர் என்பதை மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.