பிரதம நீதியரசராக மீண்டும் பதவியேற்கும் சிராணி
பிரதம நீதியரசராக முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பதவி நீக்கப்பட்ட 43வது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும்.
அதேவேளை, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவிவிலக வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரிய தெரிவித்தார்
சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மட்டுமன்றி, இது தொடர்பில் கூட்டப்பட்ட சிறப்பு பொதுச் சபையும் சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றே கோரியுள்ளதாகவும் வழக்கறிஞர் உப்புல் ஜயசூரிய கூறியுள்ளார்.








