காணாமற்போனோர் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம்
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் ஆணைக்குழுவிற்கு 19 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.இவற்றில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் , கிளிநொச்சி,முல்லைத்தீவு , மட்டக்களப்பு , மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்காலத்தில் குறித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை முன்னெடு்க்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.








