அமைச்சர்கள் தவறு செய்வது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன் - வருந்துகிறார் மஹிந்த
புதிய அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற பின் நாடு ஸ்திரமற்ற நிலையில் உள்ளதாகவும் அதனால் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் தனக்கும் தனது சகோதரர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைத்து குடும்பத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் வௌிநாட்டு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். அங்கே எவ்வித ஆதாரமும் இல்லை. அவர்கள் பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இது பழிவாங்கும் திட்டம்´ என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் நிதி மோசடியில் ஈடுபடவில்லை என்றும் சுவிஸ், டுபாய் வங்கிகளில் பணம் இருப்பதாக இவர்கள் கூறியபோதும் எங்கே அந்த பணம்? ஆதாரம் எங்கே என்று மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். டுபாயில் ஹோட்டல் இருப்பதாகவும் இலங்கையில் உள்ள ஹோட்டல்கள் கோட்டாபய , பசில் உடையது என்று சொல்லுகின்றனர். இது நகைச்சுவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் சீனாவுக்கு ஆதரவானவன் அல்ல என்றும் இலங்கையின் பாரிய திட்டங்கள் அனைத்தும் முதலில் இந்தியாவுக்கே வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் அதனை பொறுப்பேற்காததால் சீனா பெற்றுக் கொண்டதகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தினம் புனிதமானதென தனது சோதிடர் கூறியதாகத் தெரிவித்த மஹிந்த தான் பல தவறுகளை இழைத்துள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஊழலில் ஈடுபட்ட, அதிகார துஸ்பிரயோகம் செய்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்காமல் இருந்தது தவறு என மஹிந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்கள் இன்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலுக்கு மீள வருவது குறித்து மஹிந்தவிடம் வினவியபோது, தான் இன்னும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்றும் தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.








