Breaking News

இலங்கைக்கு அழுத்தமான செய்தி வழங்கப்பட வேண்டும்! தமிழக முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை

இந்திய மீனவர்கள் 37 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தமான செய்தியொன்றை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 37 மீனவர்களும் அவர்களின் 18 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை விடுவிப்பதற்கு உயர்மட்ட இராஜதந்திர ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிவடைந்து சில நாட்களில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கைதுச் சம்பவமானது துரதிஸ்டவசமானது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், மீனவர் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவரலாம் என நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் இந்த செயற்பாடானது தமிழக மீனவர்களின் மனங்களில் தொடர்ந்தும் குழப்பமான நிலையை ஏற்படுத்துவதாகவும், இது இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் ஓ.பன்னீர்செல்வம், நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இரு தரப்பு மீனவர்களின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான செய்தியொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.