Breaking News

யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள் ?-வலம்புரி


இது எங்கள் ஊர்களில் சொல்லப்படும் கதை.
ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடலுக்குச் சென்று ஆமையைப் பிடித்துவந்து கரையில் விட்டுவிட்டு, மீளவும் ஆமை பிடிக்கச் செல்வார்கள். பிடிபட்ட ஆமைகள் தமது தலை, கால்களை ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும். 

இதைப் பார்த்தவர்கள் இனிமேல் ஆமை ஓடாது என்று நினைப்பர். எனினும் சிறிது நேரத்தின் பின் கரையில் விடுபட்ட ஆமைகள் ஆளரவம் இல்லாததும் கடலுக்குள் ஓடித் தப்பிவிடும். இப்படியே ஆமை பிடிப்பதும் அதை கரையில் விடுவதும் பின்னர் அந்த ஆமைகள் தப்பி ஓடுவதுமாக நிலைமை இருந்தது. 

இதைப் பார்த்த கடவுள் கவலை கொண்டார். ஒரு நாள் அசரீதியாக கடவுள் பேசினார். ஆமையைப் பிடிப்பவர் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம். இது கடவுள் கூறிய வாக்கு. அந்த வாக்கை கேள்வியுற்றவர்கள் தாம் பிடித்த ஆமைகளை மல்லாத்திவிட்டனர். அவ்வளவு தான் பிடிபட்ட ஆமைகள் எதுவும் கடலுக்குச் செல்லவில்லை. 

இது போன்றது தான் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலும். இந்தக் கட்சிக்கு, இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கூறுவது ஒரு நடுநிலைப் பத்திரிகைக்கு அழகல்ல. அது பாவமும் கூட. அதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை, உண்மையை சொல்லாமல் விடுவதும் நடுவுநிலைமைக்குக் குந்தகம் செய்வதாகும். 

இங்கு தான் ஆமையைப் பிடிப்பவர் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம் என்ற வார்த்தையை நினைத்துப் பார்க்கின்றோம். ஆம், அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! தேர்தலில் வாக்களிப்பதென்பது நம் எல்லோரினதும் கடமை. ஆட்சியை, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்கின்ற பொறுப்பு எங்களிடம் தரப்பட்டுள்ளது. 

அதை நாம் சரியாகச் செய்யவேண்டும். விருப்பு வெறுப்புகள் என்பதற்கு அப்பால் எது சரி; எது பிழை என்பதை நுணுகி ஆராய்ந்து முடிவெடுப்பதில் நாம் தவறிழைப்போமாயின் அதன் விளைவையும் நாம் அனுபவித்தாகவேண்டும். ஆகையால் தமிழ் மக்களே! நீங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள். நிதானமாக இருந்து ஆராயுங்கள். 

ஆமையைப் பிடித்தால் அதை மல்லாத்த வேண்டும் என்ற உபாயத்தை அறிந்தது போல எங்கள் அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் நாங்கள் தீர ஆராயவேண்டும். ஏமாற்றுபவர்கள்; ஏமாற்றியவர்கள் யார்? என் பதை நீங்களே தீர்மானியுங்கள். உங்கள் மனச் சாட்சிக்கு அமைவாகச் செயற்படுங்கள். ஏமாற்றுபவர் களை எச்சந்தர்ப்பத்திலும் மன்னிக்காதீர்கள். 

தமிழ் மக்கள் மீது விசுவாசம் கொண்டவர்கள் யார்? அவ்வாறு அவர்கள் விசுவாசம் கொண்டிருந்தால் அவர்கள் செய்தது என்ன? அவர்களின் கடந்த காலப்பணி எவ்வாறு இருந்தது? அவர்களின் நேர்மைத்தன்மை எத்தன்மையது? அவர்கள் பேசுவதில் உண்மை இருக்கிறதா? என்பதை உற்று நோக்குங்கள். 

அவர்களின் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால், அவர் இதைவிட அதிகமாகச் செய்திருப்பாரா? இப்படியயல்லாம் உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள். உங்கள் கேள்விக்கான பதில் உங்களிடமே இருக்கிறது. நாம் நடுவுநிலைமையோடு செயற்படுவது மிகவும் அவசியம் என்பதால் மீளவும், ஆமையைப் பிடிப்பார் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம்.