Breaking News

வேட்புமனுவில் மகிந்த கையெழுத்திட்டது எப்போது? – புதுக்குழப்பம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் 





கையெழுத்திட்டுள்ள போதிலும், அவர் எப்போது கையெழுத்திட்டார் என்பது தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்ச நேற்றுக் காலையில் வேட்புமனுவில் கையெழுத்திட்டதாக, நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். முன்னதாக, நேற்று முன்தினமே, மகிந்த ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டு விட்டதாக பசில் ராஜபக்சவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின.

ஆனால் நேற்றுக்காலை அதனை நிராகரித்த மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட, இன்னமும் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்றும், அது பகிரங்கமாக செய்தியாளர்கள் முன்பாகவே இடம்பெறும் என்று கூறியிருந்தார்.

எனினும், திடீரென நேற்றுக்காலை மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்ட போது, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவும் இல்லை. அதுபற்றிய படங்களும் வெளியிடப்படவில்லை.


இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச நேற்றிரவே வேட்புமனுவில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு இதுதொடர்பான படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. இதில் ஒன்றில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த முன்பாக, சிராந்தி ராஜபக்ச பின்புறம் நிற்கும் போது மகிந்த ராஜபக்ச கையெழுத்திடுகிறார்.

இன்னொரு படத்தில் அவர் கையெழுத்திடும் போது, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன உள்ளிட்டோர் நின்று கொண்டிருக்கின்றனர். இந்தப் படங்களில் மின் குமிழ்கள் ஒளிருவதையும் காணமுடிகிறது.

இதனால், மகிந்த ராஜபக்ச நேற்றிரவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. எனினும், எதற்காக, வேட்பு மனுக் கையெழுத்து விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிட்டனர் என்பது தெரியவில்லை.