உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார் - THAMILKINGDOM உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார் - THAMILKINGDOM
 • Latest News

  உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார்

  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல்லாத உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த இலங்கை அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க.

  கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

  “இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்கொள்வதற்கு முன்னதாக, வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் மேலும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

  நாட்டின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, புதிய வெளிவிவகாரக் கொள்கையை வகுக்க வேண்டும். எல்லா நாடுகளுடனும் இலங்கை பலமான உறவைப் பேண வேண்டும். எல்லா நாடுகளுடனும், குறிப்பாக இந்தியா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சுமுகமான உறவைப் பேண முடியும்.

  போருக்குப் பின்னர் ஒரு அரசாங்கம், மக்களிடையே நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்புறவை ஊக்குவிக்க பல ஆண்டுகள் எடுக்கும். எனவே எந்த அனைத்துலக அழுத்தங்களும் இல்லாமல் உள்நாட்டு விசாரணை மூலம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இலங்கை அனுமதிக்கப்பட வேண்டும்.

  இன்னமும் ஐ.நா விசாரணை அறிக்கையில் என்ன உள்ளது என்று இலங்கைக்குத் தெரியாது. எவ்வாறாயினும், அந்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒரு பிரதி, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னரே, அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை இலங்கை பரிசீலிக்க முடியும்.இந்த விவகாரத்தில் 10 ஆண்டு அனுபவம் உள்ள நான், வரும் செப்ரெம்பரில், ஜெனிவாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top