Breaking News

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்காவிட்டால் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது கேள்விக்குறியாகும்

இணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வு கிடைக்­கா­விட்டால் ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்கள் வாழ்­வது கேள்விக் குறி­யா­கி­விடும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்­பாளர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

பொன்­னா­லையில் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்து அவர்கள் தமது சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து கௌர­வ­மாக வாழ­வேண்டும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஐக்­கிய இலங்­கைக்குள் இணைந்த வட­கி­ழக்கில் சுய நிர்­ணய அடிப்­ப­டையில் சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதைத் தெளிவாகக் குறிப்­பிட்­டுள்ளோம்.

சர்­வ­தேச நாடு­களில் பல்­வே­று­பட்ட சமஷ்டி கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. சமஷ்டி என்­பது தனி­நாட்­டுக்­கான கோரிக்­கை­யல்ல. இதனை உணர்ந்து கொள்­ள­வேண்டும். இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு நிரந்­தர அமைதி தொடர்­வ­தையே நாம் விரும்­பு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் நாம் முன்­வைத்­துள்ள கோரிக்­கையை புறந்­தள்ளும் வகையில் தென்­னி­லங்கை சிங்­களக் கடும்­போக்குச் சக்­திகள் பல்­வேறு திரி­வு­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்­களை கூறி வரு­கின்­றன.

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்குத் தீர்வைப் பெற்­றுத்­த­ராது என்­பதை அர­சாங்­கத்­தி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ 13இற்கு அப்பால் சென்று தீர்வை வழங்­குவேன் எனத் தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்தார். எது எவ்­வா­றா­யினும் இனப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வை சமஷ்டி அடிப்­ப­டை­யி­லேயே எட்ட முடியும்.

சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்­வொன்று கிடைக்­கப்­பெ­றாது விட்டால் ஐக்­கிய இலங்­கைக்குள் ஐக்­கி­ய­மாக வாழ்­வ­தென்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். ஆகவே, தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதை ஏற்கமுடியாது. இது தொடர்பில் தமிழ் மக்கள் தமது பெரும்பான்மையை வெளிப்படுத்தி ஓர் அணியில் திரளவேண்டு-மென்றார்.