புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? - THAMILKINGDOM புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? - THAMILKINGDOM

 • Latest News

  புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

  வணக்கம் எப்பிடி சுகம்? 
  என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். 

  இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ? இல்லாட்டி இப்பவும் புளியடிபோடுவம் எண்டு நிக்கிறியளோ. 

  எத்தினை கண்டங்களை தாண்டினாலும் கண்டம் இருக்கிற மாதிரித்தான் இருக்கு. சரி அதவிடுவம். மத்தியில கூட்டாட்சி மாகாணத்தில சுயாட்சி எண்டு சொன்னன். சந்திரிகாவோடயும் ஒட்டு மகிந்தவோடயும் வலு ஒட்டு. இணக்கஅரசியல் மூலம் தீர்வுகாணலாம் எண்டும் சொன்னன். 

  அண்டைக்கு கூட்டமைப்பு தொடக்கம் எல்லாரும் என்னை பின்னி எடுத்தியள். ஆனா அண்டைக்கு நான் என்ன சொன்னனோ அதை அப்பிடியே கொப்பிபண்ணி இண்டைக்கு கூட்டமைப்பு செய்யுது. செய்துகொண்டிருக்கு. இப்ப நான் என்ன சொன்னனோ அதைத்தான் என்ர கூட்டாளி ஆபிரகாம் சுமந்திரன் சொல்லுறார். 

  அப்ப நான் சொன்னா ஒரு மாதிரியும் ஆபிரகாம்சுமந்திரன் சொன்னா ஒரு மாதிரியும் அர்த்தம் இருக்குதோ. புலியளின்ர போராட்டத்தை நானும் ஆதரிச்சதில்லை. தம்பி சுமந்திரனும் ஆதரிச்சதில்லை. 

  எங்கள் ரண்டு பேரிலயும் நல்ல ஒட்டு இருக்கு எண்டு சக்தி ரிவி ரங்கா ரண்டு பேரும் ஒண்டா வாங்கோ கதைப்பம் எண்டான். சரி… சரி.. இந்தக்காலத்தில மேடை கிடைக்கிறது கஸ்ரம். கிடைக்கிற விடக்கூடாது எண்டு ஏறியிட்டன். 

  ஆனா சுமந்திரன் விட்டானே வெடி ஒண்டு. நான் என்ர ஆரம்ப காலத்தில காரைநகர் கடற்படை முகாமுக்கு ஆர்பிஜி ஒண்டு அடிச்சனான். அது புகைச்சுக் கொண்டுபோய் கடலுக்குள்ள விழுந்தது. 

  அந்தக்காலத்தில எதையும் நம்பி அடிக்கேலாது. அப்பிடி ஒரு அடிதான் ஆபிரகாம் சுமந்திரன்ர அடி. அப்பிடி என்ன தான் சொன்னான் எண்டுதானே கேக்கிறியள்? 

  இண்டைக்கு விடப்படுற காணியள் எல்லாத்துக்கும் வழக்கு போட்டது மாவை அண்ணனாம். வழக்கை நடத்தினது சுமந்திரன் தானாம். வழக்கிலவெண்டு இண்டைக்கு கொஞ்சம் கொஞ்சமாக காணியள் விடுவிக்கப்பட்டு கொண்டிருக்கு எண்டு கூசாம சொல்லுறான் என்ன? 

  நீங்கள் கேக்கலாம். இந்த விசயத்தில நானும் சுமந்திரனும் ஒண்டும் எண்டு. ஆனா நான் எதையும் வெளிப்படையாய் செய்தனான் என்ன? என்னைப்பற்றி நல்லாச் சொன்னாக்கூட நாலு சனம் நம்பாது. 

  ஏனெண்டா என்ர ஸ்ரேற்றஸ் அப்பிடி. ஆனா சுமந்திரன் நல்லது செய்யுதோ கெட்டதுசெய்யுதோ எண்டு நாலு விசயம் படிச்ச சனத்திற்கே விளங்குறது கஸ்ரம் என்ன. 

  சம்பூர் காணி விட்டாச்சோ எண்டு கேட்டால் விட்டாச்சு ஆனா விடல்ல எண்டு எஸ்.ஜே சூர்யா மாதிரி கதைக்கினம். அரசியல் கைதிகள் விடுதலை என்னமாதிரி எண்டு கேட்டன். சத்தம் போடாதைங்கோ மகிந்தவுக்கு கேக்கப்போகுது எண்டு சொல்லுறாங்கள். 

  ரணில் சொன்னவராம் தான் பார்க்காத மாதிரி அங்கால திரும்பி நிற்கக்க சிறைச்சாலையை திறந்து விடட்டாம் எண்டு சொன்னவராம் என்ன? புளுகித்திரியிறான் என்ன? இடம்பெயர்ந்த சனத்திற்கு வீடு கட்டி கொடுப்பினமோ எண்டு கேட்டன். 

  இப்ப அரசாங்கத்திட்ட காசு இல்லையாம். வெளிநாடுகளிட்ட கேக்கப்போகினமாம். எட நாசமாய்ப்போவாரே. இதைத் தானேடா இணக்க அரசியல் எண்ட பேரில இருபது வருசமா செய்தனான். அப்ப திட்டி தள்ளினீயளே. ஆறு மாசமாய் நான் சொன்ன டயலாக்குகளையே பேசிற சம்பந்திரிட்ட சுமந்திரனிட்ட நாலு கேள்வி கேக்கமாட்டியளாம். 

  என்னையும் அப்பிடிவிட்டிருந்தா இரண்டு சீற்றை நாலு சீற்றா மாத்தியிருப்பன் என்ன? இப்ப நடக்கப்போற எலக்சனில யுன்பிக்கு ஒரு சீற்று கிடைக்கும் எனக்கு ஒரு சீற் கிடைக்கும். கஜேந்திரகுமாரும் வந்திடுவார் எண்டுதான் நினைக்கிறன். மிச்சாக்கள் ஆர் வரப்போயினமோ? மாவை அண்ணரோட ஒரு நாலுபேர் வருவினம். 

  25 வருசமா என்ன செய்தனீ எண்டு மாவையை கேப்பியளோ கேக்கமாட்டியள்? ஏனெண்டா அவர் உங்கட பிரபாகரனை தம்பி தம்பி எண்டு உங்களுக்குஏத்தமாதிரி அண்ணர் கதைப்பார் என்ன? எனக்கு தெரியும் கனக்க கல்லெறி எனக்கும் விழும். ஆருக்கு தெரியும் மகிந்த இடையில விட்டிட்டு போடுவான் எண்டு. அதுக்கு நான் என்னசெய்யமுடியும். எல்லாம் விதியின்ர விளையாட்டு. எனக்கு நீங்கள் வாக்கு போடவேண்டாம் தம்பி. வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிச்சமாதிரி நானும் கொஞ்சம் சேவையள்செய்தனான் கண்டனியளோ. 

  சனம் மறக்காதுகள் என்ன? நாலு சாத்து கன்னத்தில போட்டாலும் நன்றி மறக்காத சாதி தமிழ்ச்சாதி என்ன? என்ர கதையை விடுங்கோ. எலக்சனில வெண்டு இவையள் உங்களுக்கு என்ன செய்யப்போயினம். மக்களின்ர ஆணை வேணும் மக்களின்ர ஆணைவேணும் எண்டு சொல்லுவினம். நீங்கள் ஆணை கொடுக்கிறியளோ பெண்ணை கொடுக்கிறியளோ தெரியாது. 

  அஞ்சு வருசம் வீணை செய்ததை இவை செய்வினமோ எண்டு பாருங்கோ. சரி சரி என்ன நாசம் எண்டாலும் செய்து நாசமாய்ப்போங்கோ. ஆனா கடைசியா ஒரு விசயம். நாங்கள் என்ன செய்யப்போறம் எண்டும் கேப்பியள் எல்லோ. சிறையிலே வாடுகின்ற போராளிகள் விடுவிக்கப்படவேண்டும் எண்டு உண்ணாவிரதம் இருக்கப்போறம். 

  எங்கட மக்கள் மீது கொத்துக்குண்டுகள் போடு எண்டு சொன்னவனுக்கோ அல்லது போட்டவனுக்கோ உங்கட வாக்கு எண்டு ஒரு போடு போடப்போறம். கிபிரால அடிச்சு நீங்கள் சாகக்க கொழும்பில கிரிக்கற் விளையாடினவைக்கோ உங்கட வோட்டு இல்லை வவுனியா காம்பில அடைபட்டு கிடந்தஉங்களிட்ட கொஞ்சமாக காசு வாங்கி இராசதந்திரமா வெளியில எடுத்த எங்களுக்கோ உங்கட வாக்கு எண்டு வாய்கிழிய கேக்கப்போறம். என்ன உங்களுக்கும் தலைசுத்துதோ. அப்ப வரட்டே.

  -நன்றி-லீடர்-  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புலியள் இருக்கக்க நான் முழுசினன் இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top