Breaking News

காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்தியிலும் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் வடக்கு, தெற்கைச் சேர்ந்த பலர் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.

‘இப்போதாவது காணாமல் போன சகலரினதும் தகவல்களை வெளியிடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது காணாமல் போனோரின் தகவல்களை உடனடியாக வெளியிடவேண்டும் வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியிருந்ததுடன், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்கள், பிரதேசவாசிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.